
ரஜினிகாந்தின் கூலி படம் ரிலீஸ் ஆன பின்னர் அப்படத்தில் இடம்பெற்ற நாகர்ஜுனாவின் சைமன் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர் நடிப்பு மட்டுமின்றி 65 வயதிலும் செம யங் ஆக தெரியும் அவரின் தோற்றமும் அனைவரையும் இம்பிரஸ் செய்துள்ளது. சைமன் என்கிற டெரர் வில்லனாக மிரட்டிய நாகர்ஜுனா, ஒரு நடிகையை 15 முறை கன்னத்தில் பளாரென அறைந்திருக்கிறார். அந்த சம்பவம் பற்றி அந்த நடிகையே பேட்டி ஒன்றில் ஓப்பனாக கூறி உள்ளார்.
அந்த நடிகை வேறுயாருமில்லை ஈஷா கோபிகர் தான். இவர் தெலுங்கு படங்களில் தன்னுடைய கெரியரைத் தொடங்கினார். பின்னர் பாலிவுட்டில் நுழைந்து 'டான்', 'எல்ஓசி', 'கார்கில்' மற்றும் 'சலாம்-இ-இஷ்க்: எ ட்ரிப்யூட் டு லவ்' போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் அளித்த பேட்டியில், 'சந்திரலேகா' படத்தின் படப்பிடிப்பின் போது நாகார்ஜுனா தன்னை 15 முறை அறைந்ததாக ஈஷா கோபிகர் கூறியுள்ளார். இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து ஈஷா கோபிகர் கூறுகையில், 'சந்திரலேகா படத்தின் படப்பிடிப்பின் போது நாகர்ஜுனா என்னை அறைந்தார். அது எனது இரண்டாவது படம், அப்போது என்னை அறைவது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. அதனால் நான் அவரிடம், 'நாக், நீங்கள் என்னை உண்மையிலேயே அறைய வேண்டும்' என்று சொன்னேன். அதற்கு அவர், 'நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா?' என்று கேட்டார். நானும் உறுதியாக இருப்பதாக கூறினேன். ஆனால் பின்னர் அவர் என்னிடம், 'என்னால் உன்னை அறைய முடியாது' என்றார். நான் அவரை சம்மதிக்க வைத்தேன். இருந்தாலும் அவர் என்னை மெதுவாக அறைந்தார்.
மெதுவாக அறைந்ததால் இயக்குனர் திருப்தி அடையவில்லை, அதனால் பல ரீடேக்குகள் எடுக்க வேண்டியிருந்தது என்று ஈஷா கோபிகர் கூறினார். அந்த காட்சிக்காக மட்டும் 14 முறை அறை வாங்கினேன். எல்லாம் சொதப்பின, கடைசியில், என் முகத்தில் உண்மையிலேயே அறைந்தார். அதன் தழும்புகளும் என் முகத்தில் இருந்தன. பின்னர் நாக் என்னை உட்கார வைத்து மன்னிப்பு கேட்டார். இதைக் கேட்டு நான் அவரிடம், 'நீங்கள் ஏன் என்னிடம் மன்னிப்பு கேட்கிறீர்கள்?' என்று கேட்டேன். இந்தப் படத்தின் மூலம் ஈஷாவுக்கு தெலுங்கு சினிமாவில் நல்ல பெயர் கிடைத்தது.
கிருஷ்ணா வம்சி இயக்கிய இந்த படத்தில் நாகர்ஜுனா, ராம்யா கிருஷ்ணன், முரளி மோகன், சந்திர மோகன், கிரி பாபு மற்றும் தனிகெல்லா பரணி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இது பிரியதர்ஷன் இயக்கிய சந்திரலேகா என்கிற மலையாளப் படத்தின் ரீமேக் ஆகும். ஈஷா கடைசியாக 2024 இல் வெளியான 'அயலான்' படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங்குடன் நடித்திருந்தார். இந்தப் படத்தில் சரத் கேல்கர், கருணாகரன், யோகி பாபு, டேவிட் பிராட்டன்-டேவிஸ், பானுப்ரியா மற்றும் பாலா சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அதன் பிறகு ஈஷா இன்னும் தனது அடுத்த ப்ராஜெக்டை அறிவிக்கவில்லை.