சிப்பிக்குள் முத்தாக கண்டெடுக்கப்பட்டு சலங்கை ஒலியாக ஒலித்த மாபெரும் கலைஞன்... யார் இந்த கே.விஸ்வநாத்?

First Published Feb 3, 2023, 10:44 AM IST

சிப்பிக்குள் முத்து, சலங்கை ஒலி போன்ற காலத்தால் அழியாத காவிய படைப்புகளைக் கொடுத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார். அவரைப்பற்றிய சிறப்பு தொகுப்பு இதோ...

இந்திய திரையுலகில் முக்கியமான ஒரு இயக்குனராக விளங்கியவர் கே.விஸ்வநாத். 1930-ம் ஆண்டு பிப்ரவர் 19-ந் தேதி ஆந்திர மாநிலம் கிருஷ்ணப்பா வட்டத்தில் பிறந்தார். இவருக்கு ஜெயலட்சுமி என்கிற மனைவியும், நாகேந்திரநாத், ரவீந்திரநாத் என்கிற மகன்களும், பத்மாவதி என்கிற மகளும் உள்ளனர். ஸ்டூடியோ ஒன்றில் சவுண்ட் இன்ஜினியராக தன் சினிமா வாழ்க்கையை தொடங்கிய அவர், இயக்குனராகும் ஆசையில்  தெலுங்கு இயக்குனர் சுப்பாராவ் என்பவரிடம் உதவியாளராக பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து கே.பாலச்சந்தர், பாபு என பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி சினிமாவை அழகாக கற்றுக்கொண்டார்.

இவர் இயக்கிய முதல் திரைப்படமான ஆத்ம கவுரவம் கடந்த 1965-ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் நாகேஷ்வர ராவ், காஞ்சனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆந்திராவில் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான சுலோச்சனா எழுதிய ஆத்ம கவுரவம் என்கிற நாவலை தழுவி விஸ்வநாத் இயக்கிய அத்திரைப்படம், ஆந்திர அரசின் நந்தி விருதை பெற்றது. 

இவரை கலாதபஸ்வி கே.விஸ்வநாத் என்றே அழைத்தனர். கலாதபஸ்வி என்றால், தவத்தினை போல கலையினை நேசிப்பவர் என்று பொருள். இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படுபவர் தாதா சாகேப் பால்கே. இந்தியாவின் முதல் சினிமாவை இயக்கியவர் அவர். அதனால் இந்திய சினிமாவில் மிக சிறப்பாக செயல்படுபவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும், அந்த உயரிய விருதை 2016-ம் ஆண்டு கே.விஸ்வநாத் பெற்றார்.

1992-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டார் கே.விஸ்வநாத். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடியவர் கே.விஸ்வநாத். இவர் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி இருந்தாலும், சங்கராபரணம், சாகர சங்கமம் ஆகிய படங்கள் காலத்தால் அழியாத படைப்புகள் ஆகும். 1983-ம் ஆண்டு கே.விஸ்வநாத் இயக்கத்தில் தெலுங்கில் சாகர சங்கமம் படம் உருவானது.

கமல்ஹாசன் நாயகனாக நடித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். இப்படம் 3 பிலிம்பேர் விருதுகள், 3 தேசிய விருதுகள் மற்றும் 2 நந்தி விருதுகளை வென்றிருந்தது. பிறகு இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சலங்கை ஒலி என்கிற பெயரில் ரிலீஸ் ஆனது. தமிழகத்திலும் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் பல திரையரங்குகளில் கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் வரை ஓடியது. கமல்ஹாசனின் கெரியரில் சலங்கை ஒலி பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இதையும் படியுங்கள்... தீவிர ரசிகனாக... மாஸ்டருக்கு சல்யூட் - இயக்குனர் கே.விஸ்வநாத் மறைவுக்கு கமல் எழுதிய இரங்கல் கடிதம்

அதன்பிறகு கமல்ஹாசனும், கே.விஸ்வநாத்தும் இணைந்து பல படங்களில் பயணித்தனர். கே.விஸ்வநாத் இயக்கத்தில் 1985-ல் வெளியான ஸ்வாதி முத்யம், இந்திய சினிமாவில் மற்றுமொரு மைல்கல் படமாகும். இப்படம் தமிழில் சிப்பிக்குள் முத்து என்கிற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. கே.விஸ்வநாத் இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளர், நடிகர் என பன்முக ஆளுமையாகவே இந்திய சினிமாவில் வலம் வந்தார்.

குருதிப்புனல், முகவரி, யாரடி நீ மோகினி, பகவதி, உத்தம வில்லன் என பல தமிழ் படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் கே.விஸ்வநாத். குறிப்பாக நேர்மை தவறியதால் தற்கொலை செய்துகொள்ளும் அதிகாரியாக குருதிப்புனல் படத்தில் இவர் நடித்த கேரக்டர் இன்றளவும் பேசப்படுகிறது. கிட்டத்தட்ட நூற்றாண்டின் அனுபவத்தை தாங்கி நின்ற ஆழமரமாக இருந்த கே.விஸ்வநாத் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது இழப்பு ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பது தான் உண்மை.

இதையும் படியுங்கள்... பரியேறும் பெருமாள் பட நடிகர் நெல்லை தங்கராஜ் மரணம் - திரையுலகினர் இரங்கல்

click me!