
இசைஞானி இளையராஜா இசையில் கடந்த 1996-ம் ஆண்டு வெளிவந்த படம் நாட்டுப்புற பாட்டு. அப்படத்தில் இடம்பெற்ற பாடல்களில் ‘ஒத்த ரூபா தாரேன்’ பாட்டு பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது. இந்த கிராமிய பாடல் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இந்த பாடலை இளையராஜா வேறொரு பாட்டை தழுவி தான் உருவாக்கி இருக்கிறார். அது எந்த பாட்டு என்பதை பார்க்கலாம்.
இளையராஜாவுக்கு பாவலர் என்கிற அண்ணன் இருந்தார். அவரும் ஒரு இசையமைப்பாளர் தான். இவரது கச்சேரிகள் அந்த காலத்தில் மிகவும் பேமஸ் ஆனவை. குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் இவர் கச்சேரி நடத்தி வந்திருக்கிறார். அவரது கச்சேரி வந்தாலே அதைக்காண கூட்டம் அலைமோதுமாம். அப்படி பாவலர் எழுதிய பாடலை தழுவி தான் ‘ஒத்த ரூபா தாரேன்’ பாட்டுக்கு இசையமைத்து இருக்கிறார் இளையராஜா.
இசைஞானி இளையராஜா ஆரம்ப காலகட்டத்தில் தேவாரம் பள்ளியில் படித்து வந்துள்ளார். அப்போது சில பிரச்சனைகளால் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் உருவானது. அந்த சமயத்தில் கூலி வேலை பார்த்து அந்த பணத்தில் படிக்க முடிவு செய்கிறார். அப்போது அவரது மச்சான் முனியாண்டி என்பவர் வைகை அணைகட்டும் பணியில் ஈடுபட்டிருக்க அவரிடம் வேலைக்கு சேர்ந்திருக்கிறார் இளையராஜா.
வேலை பார்க்கும் போதே பாடிக்கொண்டே வேலை செய்வாராம் இளையராஜா. இவரது பாட்டுக்கு அங்கு தனி ரசிகர் கூட்டமே இருக்குமாம். அப்படி கூலி வேலை செய்து பணத்தை சேர்த்து மீண்டும் படிக்க பள்ளிக்கு செல்கிறார். மறுபடியும் படிப்பு தடைபட்டு போகிறது. இதனால் வீட்டில் இருக்கும் இளையராஜா, தன்னுடைய அண்ணன் பாவலர் உடன் மேடை கச்சேரிகளில் பாடி வந்துள்ளார்.
இதையும் படியுங்கள்... விஜய் வர்மா உடன் காதல் முறிவா? பிரேக் அப் பற்றி ஓப்பனாக பேசிய தமன்னா
இளையராஜாவின் அண்ணன் பாவலர் பன்முகத்திறமையாளராம். அவரே பாடல் எழுதி, இசையமைத்து பாடிவிடுவாராம். அதுமட்டுமின்றி கம்யூனிஸ்ட் மேடைகளில் தலைவர்கள் பேசுவதை கீழே அமர்ந்து கவனிக்கும் பாவலர் அவர்கள் பேசி முடித்ததும் அதில் இருந்து ஒரு பாட்டை உருவாக்கி பாடி அசத்துவாராம்.
அப்படி ஒருமுறை கம்யூனிஸ்ட் கட்சிக்கான பிரச்சாரத்திற்காக சென்றபோது அதற்காக ஆண், பெண் பாடும்படி ஒரு பாடலை எழுதி இருக்கிறார் பாவலர். அப்போது பெண் குரலில் பாடுவதற்கு தன் தம்பி இளையராஜாவை அழைத்து சென்றிருக்கிறார் பாவலர். ஏனெனில் டீன் ஏஜ் ஆரம்பிக்கும் முன் ஆண்கள் குரல் சற்று பெண் குரல் போன்று இருக்கும் என்பதால் இளையராஜாவை அந்த கச்சேரிக்கு அழைத்து செல்கிறார் பாவலர்.
மாயவரத்தில் பிரச்சாரத்துக்கு சென்ற பாவலர் மேடையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாகவும் ஒரு பாடலை எழுதி இருக்கிறார். அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி செய்த ஊழல்களையும் அதில் வெளிப்படுத்தும் விதமாக அந்த பாடலை எழுதி இருக்கிறார் பாவலர்.
அந்த பாடலில் ஆண் குரலில் வரும் வரிகளை பாவலரும், பெண் குரலில் வரும் வரிகளை இளையராஜாவும் பாடி இருக்கின்றனர். அப்படி, ‘ஒத்த ரூபாயும் தாரேன் நான் உப்புமா காப்பியும் தாரேன்; ஓட்டுப் போடுற பெண்ணே நீ மாட்ட பாத்து போடுனு பாவலர் பாடி இருக்கிறார். அதில் மாடு சின்னத்தில் தான் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டிருக்கிறது.
பதிலுக்கு இளையராஜா, ‘உன் ஒத்த ரூபாயும் வேணாம்; உன் உப்புமா காப்பியும் வேணாம்... ஓட்டு போட மாட்டேன் நீங்க ஊரக் கெடுக்குற கூட்டம்’ என பெண் குரலில் பாடுவாராம். இப்படியே 10 ரூபா வரை இருவரும் மாறி மாறி பாடிவிட்டு, இறுதியாக பெண் சொல்வதைக் கேட்டு ஆண் மனசு மாறி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓட்டுப் போட சம்மதிக்கும்படி அந்த பாடலை எழுதி இருந்தார் பாவலர்.
அரசியல் மேடையில் பாவலர் பாடிய அந்த பாடலை மையமாக வைத்து அதே சாயலில் இளையராஜா உருவாக்கிய பாடல் தான் ‘ ஒத்த் ரூபா தாரேன்’ பாட்டு. இப்பாடல் இன்றளவும் திருவிழாக்களில் தவறாமல் ஒலிக்கும் அந்த அளவுக்கு காலம் கடந்து கொண்டாடப்படும் ஒரு மாஸ்டர் பீஸ் பாடலாக அது உள்ளது.
இதையும் படியுங்கள்...முதல் படமே ஹிட்... 'ஜெயம்' முதல் 'சைரன்' வரை! ஜெயம் ரவி நடித்த வெற்றிப்படங்கள் இத்தனையா?