Ilaiyaraaja Song Secret : இளையராஜா தன்னுடைய சகோதரன் கங்கை அமரன் இயக்கிய படத்திற்கு கதை கேட்காமல் பாடல்களை கம்போஸ் செய்து அசத்தி இருக்கிறார். அது என்ன படம் என்பதை பார்க்கலாம்.
இசை உலகின் கடவுளாகவே பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. அவர் இசையமைத்தால் படம் கன்பார்ம் ஹிட்டாகிவிடும் என்கிற நிலைமை தான் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் இருந்தது. இளையராஜாவின் இசைக்காகவும் அவரின் பாடல்களுக்காகவும் திரையரங்குகளுக்கு மக்கள் படையெடுத்து வந்த சம்பவங்களும் நிறைய உண்டு. அப்படிப்பட்ட இசைஞானி கதையே கேட்காமல் ஒரு படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.. ஆனால் அதுதான் நிஜம்.
24
Ilaiyaraaja
ஒரு படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்றால் அப்படத்தின் கதையை தான் இசையமைப்பாளர்கள் முதலில் கேட்பதுண்டு. ஏனெனில் காட்சி என்ன, எதனால் அந்த இடத்தில் பாடல் வருகிறது என்று இயக்குனர் விவரமாக சொன்னால் தான் அதற்கேற்ற இசையை இசையமைப்பாளர் கொடுப்பார்கள். ஆனால் இளையராஜா படத்தின் கதையை கேட்காமல் வெறும் டைட்டிலை மட்டும் வைத்தே இசையமைத்த படம், பாடல்களுக்காகவே ஒராண்டுக்கு மேல் தியேட்டரில் ஓடி பிளாக்பஸ்டர் ஹிட்டாகி இருக்கிறது.
அந்த படத்தை இயக்கியது வேறுயாருமில்லை; இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் தான். அந்த படத்தின் பெயர் கரகாட்டக்காரன். இப்படத்தை பற்றி இளையராஜாவிடம் டிஸ்கஸ் செய்ய சென்ற கங்கை அமரன், படத்தின் டைட்டிலை மட்டும் சொன்னதும் இது நல்லாவே இல்ல... இப்படி பெயர் வைத்தால் ஓடாது என சொல்லிவிட்டாராம் இசைஞானி. அதற்கு கங்கை அமரன், அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் பாட்டை மட்டும் போட்டு தாங்க என கேட்டிருக்கிறார். அந்த வகையில் கரகாட்டக்காரன் என்றால் கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக தான் இருக்கும் என யூகித்து 9 பாடல்களுக்கு மெட்டு போட்டு கங்கை அமரனிடம் கொடுத்திருக்கிறார்.
44
Secret Behind karagattakaran Movie Songs
அதன்பின்னர் அந்த பாடல்களுக்கு கங்கை அமரன் பாடல் வரிகள் எழுத இந்த கூட்டணியில் உருவான மேஜிக் தான் கரகாட்டக்காரன் திரைப்படம். அந்த காலகட்டத்தில் இப்படத்தின் பாடல்களை கேட்பதற்காகவே தியேட்டருக்கு ரிப்பீட் மோடில் வந்து படம் பார்த்தவர்கள் ஏராளம். அப்படத்தில் இடம்பெறும் மாங்குயிலே பூங்குயிலே, குடகு மலை காற்றில் வரும், இந்த மான் உந்தன் சொந்த மான், ஊரு விட்டு ஊரு வந்து போன்ற பாடல்கள் இன்றளவும் பலரது பிளேலிஸ்ட்டில் முதலிடம் பிடித்திருக்கின்றன.