இசைஞானி இளையராஜா, கமல்ஹாசனின் சூப்பர் டூப்பர் ஹிட் படத்திற்காக ஒரு பாடல் கம்போஸ் செய்தபோது செம குஷியில் ஆடியபடி கம்போஸ் செய்தாராம். அது எந்த பாட்டு என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இசைஞானி இளையராஜா அதிக ஹிட் பாடல்களை கொடுத்த நடிகர்கள் என்றால் அது ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தான். ரஜினிக்கு மட்டும் நல்ல நல்ல பாடல்களை கொடுப்பதாக கமலும், கமலுக்கு மட்டுமே சூப்பர் பாடல்களை போடுவதாக ரஜினியும் இளையராஜாவிடம் சண்டை போடுவார்களாம். ரஜினிக்கு பல மாஸ் பாடல்களை கொடுத்திருக்கும் இளையராஜா, கமல் படங்களில் பல வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வார். அதன்காரணமாகவே அப்பாடல் கூடுதல் சிறப்பாகும். அந்த வகையில் கமல் இயக்கி, நடித்த படத்திற்கு இளையராஜா இசையமைத்த ஒரு ஹிட் பாடலைப் பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
24
விருமாண்டி பட பாடல் ரகசியம்
கமல்ஹாசன் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் விருமாண்டி. ஆரம்பத்தில் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க மறுத்துவிட்டாராம். ஏனெனில் படத்தின் கதை கேட்டுவிட்டு படம் முழுக்க அடிதடி, வெட்டு குத்து தான் இருக்கு, இதுல எனக்கு என்ன வேலை என கேட்டிருக்கிறார். அதன்பின்னர் பாடல்களுக்கான ஒவ்வொரு சிச்சுவேசனாக கமல் சொன்னதும், இசையமைக்க சம்மதித்து இருக்கிறார் இளையராஜா. இப்படத்தின் வெற்றிக்கு அதில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் ஒரு முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
34
ஆடிக்கொண்டே பாடிய இளையராஜா
அந்த அளவுக்கு அப்படத்திற்கு ஒரு பூஸ்ட் ஆக அமைந்திருந்தது இளையராஜாவின் இசை. அப்படத்தின் கம்போசிங்கின் போது, தான் விருமாண்டி படத்திற்காக ஒரு பாடல் உருவாக்கி இருக்கிறேன் வாங்க கேட்கலாம் என குஷியோடு கமலை கையை பிடித்து அழைத்து சென்றிருக்கிறார் இளையராஜா. வழக்கமாக ஹார்மோனியத்தை தரையில் அமர்ந்தபடி வாசிக்கும் அவர், அன்று ஒரு டேபிள் மேல் வைத்துவிட்டு, தான் கம்போஸ் செய்த டியூனை லிரிக்ஸுடன் ஆடியபடியே வாசித்துக் காட்டி இருக்கிறார். அப்போது வேட்டி அவிழ்ந்து விழ, அதை இழுத்து கட்டிக்கொண்டு வாசித்துக் காட்டினாராம்.
அந்த பாடல் முழுவதையும் பாடி முடித்ததும், இதன் பாடல் வரிகளும் அருமையாக இருக்கிறதே யாரு எழுதுனது... நல்ல கவிஞரா இருக்காரே என கமல்ஹாசன் கேட்க, அது தான் எழுதிய பாடல் தான் என சொல்லி இருக்கிறார் இளையராஜா. இப்படி அவர் ஜாலியான மூடில் உருவாக்கியது தான் கொம்புல பூவ சுத்தி பாடல், விருமாண்டி திரைப்படத்தில் ஜல்லிக்கட்டு காட்சியின் போது அப்பாடல் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இன்றளவும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தால் இந்தப் பாடல் ஒளிபரப்பாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு காலம் கடந்து கொண்டாடப்படும் ஒரு மாஸ்டர் பீஸ் பாடலாக இது அமைந்திருக்கிறது.