
மருத்துவத் துறையைச் சார்ந்த ஒரு வெப் சீரிஸ் தான் ஹார்ட் பீட். வாரந்தோறும் வெள்ளியன்று ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்தது இந்த ஹார்ட் பீட். செண்டிமெண்ட், லவ், குடும்பம், சோகம், பரிதாபம் என்று எல்லாவற்றின் கலவையாக ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தது.
கடந்த மார்ச் 8ஆம் தேதி முதல் எபிசோடை ஹார்ட் பீட் வெளியிட்டது. தனியார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவனையில் அறுவை சிகிச்சை பயிற்சியாளர்கள், வசிக்குமிடம் மற்றும் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த வெப் தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த வெப் தொடரில் யூடியூப் பிரபலங்களான தீபா பாலு (ரீனா), அனுமோல் (ரதி தியாகராஜன்), சாருகேஷ் (அர்ஜூன்), அமித் பார்கவ் (மதன்), யோகலட்சுமி (தேஜூ), ஷர்மிளா தபா (அருணா), ஆர்ஜி ராம் (நவீன்), கவிதாலயா கிருஷ்ணன் (கணேஷ்), சபரேஷ் என்ற ராமகிருஷ்ணா (ராக்கி), குரு லக்ஷ்மன் (ரவி), பாடினி குமார் (அனிதா), சந்திரசேகர் கொனேரு (தேவ்) என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்த தொடரில் ரியாஸ் கான், போஸ் வெங்கட், மோகன் ராமன் ஆகியோர் சிறப்பு தோற்றத்திலும் வந்து சென்றுள்ளனர். ஹார்ட் பீட் வெப் தொடரை இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியிருந்தார். பதிமினி வேலு மற்றும் ராஜவேலு இருவரும் இணைந்து இந்த வெப் தொடரை தயாரித்துள்ளனர். மார்ச் 8 ஆம் தேதி முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது.
வாரந்தோறும் வெள்ளியன்று மட்டுமே இந்த தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதுவும், ஒரே நாளில் 4 எபிசோடுகளை வெளியிட்டு வந்தது. இந்த தொடருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள். மெடிக்கல் சீரியஸூக்கு மத்தியிலும் காதல், செண்டி மெண்ட் என்று இந்த தொடர் இளம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது.
அதுவும் ரீனா, ராக்கி, குணா ஆகியோரது காம்போவும், அனிதா மற்றும் ரவியின் ஃப்ரண்ட்ஷிப் மற்றும் ரவி மற்றும் பாரதியின் காதல் டிராமா என்று ஹார்ட் பீட் தொடர் உண்மையிலேயே ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளது.
புகழ்பெற்ற பொது அறுவை சிகிச்சை நிபுணரான ரதியின் (அனுமோல்) விட்டு சென்ற குழந்தையன ரீனா (தீபா பாலு) ரதி வேலை பார்க்கும் அதே மருத்துவமனையில் வேலையில் சேர்கிறார். அப்போது முதல் இந்த தொடர் தொடங்குகிறது. ரதி தான் தனது அம்மா என்று தெரிந்தும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனது கதாபாத்திற்கு ஏற்றவாறு நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இறுதியில் மருத்துவமனையின் சி இ ஓ யார் என்ற போட்டி நிலவுகிறது. அதில், ரதி, அர்ஜூன், மதன் ஆகியோர் போட்டியிட கடைசியில் ரதி தோற்கிறார். இறுதியாக ரதியின் ஓட்டு மூலமாக அர்ஜூன் தனது தந்தையின் மருத்துவனைக்கு சிஇஓவாக மாறுகிறார். ஒரு கட்டத்தில் ரீனா தான் ரதியின் மகள் என்று மருத்துவமனை முழுவதும் தெரிய வருகிறது.
இறுதியாக ரதியின் கணவர் தேவ்விற்கும் தெரியவர குடும்பத்தில் பூகம்பம் வெடிக்கிறது. இனிமேல் நீ இங்கு இருக்க கூடாது என்று தனது அம்மா ரதி சொல்ல ரீனா ஊரை விட்டு செல்ல முடிவு எடுத்து ரயில் நிலையம் செல்கிறார். அங்கு எதிர்பாராத விதமாக தனது தாத்தா தியாகராஜனை சந்திக்கிறாள்.
ரயில் நிலையம் சென்ற ரீனா மீண்டும் மருத்துவமனைக்கு வேலை வருகிறாள். அதோடு முதல் சீசன் முடிவுற்றதாக அறிவிக்கப்படுகிறது. ஹார்ட் பீட் 100 எபிசோடுகள் வரையில் ரசிகர்களுக்கு எந்தவித வருத்தமும் இல்லாமல் ஒரு முழு படம் பார்த்த ஒரு சந்தோஷத்தை ஆழமான கருத்துக்களுடன் தெளிவான காட்சியோடு எடுத்துக் காட்டியிருக்கிறது. ஹார்ட் பீட் வெப் தொடரின் 2ஆவது சீசன் வரும் 2025 ஆம் ஆண்டு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது போன்ற ஒரு வெப் தொடர் படமாக ஏன் திரையரங்குகளில் வெளியிடப்படுவதில்லை என்ற கேள்வி எழுகிறது. இதே போன்ற ஒரு வெப் தொடர் தான் யோகி பாபு நடித்த சட்னி சாம்பார், சத்யராஜ், ரக்ஷன், சீதா, ரேகா நடித்த பெர்பெக்ட் ஹஸ்பண்ட் என்ற வெப் தொடரும் ஹாட் ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.