பிளாப் ஸ்டார் ஆக மாறுகிறாரா ஜிவி பிரகாஷ் குமார்? 4 ஆண்டுகளில் இத்தனை தோல்வி படங்களா?
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜிவி பிரகாஷ் குமார் இதுவரை 25 படங்களில் நடித்துள்ளார். இதில் பெரும்பாலானவை பிளாப் படங்கள் தான்.
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜிவி பிரகாஷ் குமார் இதுவரை 25 படங்களில் நடித்துள்ளார். இதில் பெரும்பாலானவை பிளாப் படங்கள் தான்.
GV Prakash Flop Movies : வசந்த பாலன் இயக்கிய வெயில் படம் மூலம், இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். முதல் படத்திலேயே தன்னுடைய இசையால் ரசிகர்களை கவர்ந்த ஜிவி, அடுத்தடுத்து அஜித்தின் கிரீடம், விஜய்யின் தலைவா, செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களுக்கு தரமான இசையை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்தார். மியூசிக்கில் கொடிகட்டிப் பறந்த ஜிவிக்கு திடீரென நடிப்பின் மீது ஆசை வந்தது.
இவர் கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த டார்லிங் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அவர் நடித்த முதல் படமே ஹிட்டானதால், தொடர்ந்து ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டு அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடிக்கத் தொடங்கினார். அவர் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான 10 ஆண்டுகளில் 25 படங்களில் நடித்து முடித்துவிட்டார். அதில் சோகமான விஷயம் என்னவென்றால் அவர் நடித்த படங்களில் பெரும்பாலானவை பிளாப் படங்கள் தான்.
இதையும் படியுங்கள்... அட்டர் பிளாப் ஆன ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன்; பட்ஜெட் 20 கோடி.. ஆனா வசூல் இவ்வளவுதானா?
அதிலும் கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் நடித்த படங்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால், இந்த காலகட்டத்தில் அவர் மொத்தம் 10 படங்களில் நடித்திருக்கிறார். இதில் 2021-ம் ஆண்டு வெளிவந்த பேச்சிலர் படத்தை தவிர எஞ்சியுள்ள 9 படங்களுமே பிளாப் தான். வணக்கம் டா மாப்ள, ஜெயில், செல்பி, ஐங்கரன், அடியே, ரிபெல், கள்வன், டியர், கிங்ஸ்டன் ஆகிய படங்களும் இதில் அடங்கும். இதில் அவரது 25வது படமாக வெளிவந்த கிங்ஸ்டன் படத்தை அவரே மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்தும் இருந்தார்.
நடிகராக சொதப்பினாலும் இசையமைப்பாளராக தொடர்ந்து கலக்கி வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார். இவர் இசையில் கடந்த ஆண்டு வெளிவந்த அமரன், லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்தன. இதில் அமரன் படம் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. அதேபோல் இந்த ஆண்டு அவரது இசையில் வீர தீர சூரன், அஜித்தின் குட் பேட் அக்லி, தனுஷின் இட்லி கடை என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்கள் லைன் அப்பில் உள்ளன. நடிப்பை தவிர்த்து இசையில் கவனம் செலுத்தினால் அனிருத்தையே அசால்டாக பின்னுக்கு தள்ளிவிடுவார் ஜிவி என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
இதையும் படியுங்கள்... ஜிவி-யின் கடல் சாகசமாக வெளியான 'கிங்ஸ்டன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட் இதோ!