அனுஷ்கா ஷெட்டி 'பாகுபலி' படத்தின் மூலம் பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். அதன் பிறகு அதிக படங்களில் அவர் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடிப்பில் வெளிவந்த படம்தான் 'காட்டி'. கிருஷ் ஜாகர்லமூடி இயக்கத்தில் உருவான இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் வெளியானது. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'காட்டி' வெளியானாலும் அப்படத்தின் முதல் நாள் வசூல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
25
அனுஷ்காவின் காட்டி
இப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி ஜோடியாக நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நடித்துள்ளார். ஜெகபதி பாபு, ராஜு சுந்தரம், ஜான் விஜய், ஜிஷு சென் குப்தா, லாரிசா போனசி, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் மாதவ் புர்ரா வசனம் எழுத, சிந்தகிந்தி ஸ்ரீனிவாச ராவ் கதை எழுதியுள்ளார். வித்யாசாகர் நாகவல்லி இசையமைத்துள்ளார். யுவி கிரியேஷன்ஸ் வழங்க, ஃபர்ஸ்ட் ஃப்ரேம் எண்டர்டெயின்மென்ட் சார்பில் ராஜீவ் ரெட்டி, சாய்பாபா ஜாகர்லமூடி தயாரித்துள்ளனர். 'காட்டி' படம் சுமார் ₹50 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது.
35
காட்டி பட பிசினஸ்
'காட்டி' படம் வெளியாவதற்கு முன்பே இதற்கு மிகப்பெரியளவில் எதிர்பார்ப்பு நிலவியது. குறிப்பாக ப்ரீ ரிலீஸ் வியாபாரம் மட்டும் சுமார் ₹52 கோடி வரை பதிவாகியுள்ளது. 'காட்டி' படம் லாப நஷ்டமற்ற நிலையை அடைய குறைந்தபட்சம் ₹55 கோடி ஷேர் வேண்டும், அதாவது சுமார் ₹100 கோடி வசூல் தேவை என்று விநியோகஸ்தர்கள் மதிப்பிட்டுள்ளனர். கிருஷ் ஜாகர்லமூடியின் இயக்கம், அனுஷ்காவின் நட்சத்திர அந்தஸ்தை நம்பியே படத்தின் வெற்றி உள்ளது.
அனுஷ்கா ஷெட்டிக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் மற்றும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு காரணமாக, 'காட்டி' படத்திற்கு பெரிய வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் நாளில் எதிர்பாராத வசூல் கிடைத்தது. Sacnilk தகவலின்படி, ₹50 கோடி பொருட்செலவில் உருவான இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் வெறும் ₹4 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதில் இந்தியாவில் இப்படத்தின் வசூல் சுமார் ₹2.5 கோடி எனத் தெரிகிறது. முதல் நாளில் 10 கோடியாவது வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் பாதி வசூல் கூட காட்டி படத்திற்கு வரவில்லை.
55
தோல்வியில் இருந்து தப்பிக்குமா காட்டி?
அனுஷ்கா-கிருஷ் கூட்டணியில் வெளியான காட்டி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. முதல் காட்சியிலிருந்தே படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்ததால் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. சனி மற்றும் ஞாயிறு விடுமுறையில் இப்படத்தின் வசூல் பிக் அப் ஆனால் மட்டுமே படுதோல்வியில் இருந்து தப்பிக்க முடியும். இல்லையென்றால் காட்டியை யாராலும் காப்பாற்ற முடியாது என திரையுலக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.