பாஜகவில் ஏற்கனவே காயத்ரி ரகுராம், நமீதா உள்ளிட்டோர் தீவிரமாக செயல்படு வரும் நிலையில், சமீபத்தில் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
இதையடுத்து நடிகர்கள் விஷால், சந்தானம், வடிவேல், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் பாஜகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அனைவரும் சொல்லி வைத்தது போல் அனைத்தும் வதந்தி என மறுப்பு தெரிவித்தனர்.
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மோகன் வைத்யா, பிரபல தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி பிரபல நடிகரும், தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மகனுமான சுப்பு பஞ்சு அருணாச்சலம் பாஜகவில் இணைந்தார். இவர் நடிகை குஷ்புவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் மூலமாக நடிகையாக அறிமுகமான வினோதினி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் கடந்த ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குநராக வலம் வரும் கலா மாஸ்டரும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை