இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல், தனது நீண்ட நாள் காதலியான அதியா ஷெட்டியை கடந்த ஜனவரி 24-ந் தேதி மும்பையில் திருமணம் செய்துகொண்டார். குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
கே.எல். ராகுல் கிரிக்கெட் வீரர் என்பதால் அவருக்கு கிரிக்கெட் பிரபலங்களான தோனி ரூ.80 லட்சம் மதிப்பிலான பைக் ஒன்றை பரிசாக வழங்கியதாகவும், அதேபோல் விராட் கோலி ரூ.2 கோடி மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை கே.எல்.ராகுலுக்கு பரிசாக வழங்கியதாக தகவல்கள் பரவி வந்தன.
அதுமட்டுமின்றி மகளுக்காக நடிகர் சுனில் ஷெட்டி ரூ.50 கோடி மதிப்பிலான பங்களா ஒன்றையும் பரிசாக வழங்கியதாகவும், இவ்வாறு கே.எல்.ராகுல், அதியா ஷெட்டி திருமணத்துக்கு வந்த பரிசுகளின் மதிப்பு மட்டும் ரூ.100 கோடி இருக்கும் என்றும் கூறப்பட்டு வந்தது. கடந்த இருதினங்களாக இதுகுறித்த தகவல்கள் காட்டுத்தீ போல் பரவி வந்தன.