சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2002ல் வெளியான திரைப்படம் பாபா. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை தயாரித்தும் இருந்தார். ரஜினியை வைத்து அண்ணாமலை, வீரா, பாட்ஷா போன்ற ஹிட் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கினார். ரஜினிகாந்தின் மனதுக்கு மிகவும் நெருக்கமான இந்த படம், மிக பிரமாண்டமாக வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்று படு தோல்வியை சந்தித்தது.
ரஜினிகாந்த் தான் தெய்வமாக வழிபடும், பாபாஜியின் மகிமைகளை எடுத்து கூறும் விதமாக இந்த படத்தின் திரைக்கதையை எழுதி இருந்தார். அதே நேரம்... முழு தெய்வீக படமாக மட்டுமே இல்லாமல், காதல் ஆக்ஷன், அரசியல், செண்டிமெண்ட், காமெடி என அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக இது இருந்தது. இந்த படத்தில் ரஜினி காட்டிய அந்த பாபா முத்திரை, படம் வெளியான சமயத்தில் குழந்தைகளை பெரிதும் கவர்ந்தது. பின்னர் ரஜினி அரசியல் குறித்து அறிவித்தபோது... அந்த முத்திரையை தான் தன்னுடைய கட்சி கொடியிலும் பயன்படுத்தி இருந்தார்.
அதாவது ‘பாபா’ படத்தில், அரசியல் பாதையே சரி என்ற கிளைமேக்ஸ் இருக்கும். இன்றைக்கு தனது ரசிகர்களே அதை விரும்பமாட்டார்கள் என உணர்ந்த அவர், மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள படத்தில் கிளைமேக்ஸை மாற்றியுள்ளார். ‘நீ உன் தாயின் மனதை காயப்படுத்தி இருக்கிறாய். எனவே மீண்டும் பிறந்து தாயின் ஆசையை நிறைவேற்று. நேரம் வரும்போது உன்னை அழைக்கிறேன்’ என பாபா கூறுவது போல் இறுதிகாட்சி மாற்றப்பட்டுள்ளதாம்.