பிரம்மாண்ட வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். அவர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டே அறிவிக்கப்பட்ட இப்படம், பல்வேறு தடைகளுக்கு பின் தற்போது தான் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தியன் 2 படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக்கும் நடித்து இருந்தார். திரையுலகில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என ஏராளமான முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய நடிகர் விவேக்கிற்கு கமல்ஹாசன் உடன் பணியாற்றும் வாய்ப்பு மட்டும் கிடைக்காமலே இருந்து வந்தது. கமலுடன் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என விவேக் பல மேடைகளிலும் பேட்டிகளிலும் வெளிப்படையாகவே கூறி இருக்கிறார்.
கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மரணமடைந்துவிட்டதால், இந்தியன் 2 படத்தில் அவர் நடித்த காட்சிகள் இடம்பெறாது என கூறப்பட்டு வந்தது. அவருக்கு பதில் வேறு நடிகரை நடிக்க வைக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தன. இதனால் கமல் படத்தில் இடம்பெற வேண்டும் என்கிற நடிகர் விவேக்கின் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்கிற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது விவேக்கின் ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால், இந்தியன் 2 படத்தில் நடிகர் விவேக் நடித்த காட்சிகளை படத்தில் இருந்து தூக்கும் முடிவை கைவிட்டு உள்ளதாகவும், அவர் நடித்த காட்சிகள் படத்தில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் நடிகர் விவேக்கின் கடைசி படமாக இந்தியன் 2 மாறி உள்ளது. இருப்பினும் இப்படத்தில் விவேக்கிற்கு யார் டப்பிங் பேச உள்ளார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... Vadivelu : இனி வெறும் வடிவேலு இல்ல ‘டாக்டர்’ வடிவேலு... வைகப்புயலுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிப்பு