தமிழ் திரையுலகில் கொரோனா நெருக்கடி காலத்தில் அடுத்தடுத்து திரையுலகினர் மரணிக்கும் செய்திகள் மக்களை பெருச்சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.
வள்ளியூர் வேப்பிலான்குளத்தை சேர்ந்த நகைச்சுவை நடிகர், கிணற்றை காணோம் புகழ் நெல்லை சிவா நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார்.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதால், தமிழக அரசு முழு ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கு அறிவித்துள்ளது. இதனால், திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் முடங்கியுள்ள காரணத்தினால் பிரபல திரைப்பட துணை நடிகர், கிணற்றை காணோம் புகழ் மற்றும் திருநெல்வேலி பாஷையில் பேசி நடித்து அசதிவந்த நெல்லை சிவா தனது சொந்த மாவட்டமான நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பாஸ்கர புறத்திலுள்ள தனது சகோதரியின் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்நிலையில், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மரணம் திரை உலகத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தன்னுடைய பல படங்களில் நடித்துள்ள நெல்லை சிவா குறித்து மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார், இயக்குனர் சேரன்.
இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், என்னுடைய பல திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார்.. இவரின் நெல்லை தமிழ் அழகு.. கட்டபொம்மனின் முழு வசனத்தையும் நெல்லைத்தமிழில் பேசி என் சிந்தனைகளை வேறுபக்கம் யோசிக்க வைத்தவர். வடிவேலு, விவேக் இவர்களுடனான கூட்டணியில் அதிகம் நடித்திருக்கிறார். ஆத்மா அமைதிகொள்ளட்டும். என பதிவிட்டுள்ளார்.
மேலும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரபலங்கள், இவருடன் நடித்த நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.