நடிகை நயன்தாரா நடிப்பில் அண்மையில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் விமர்சன ரீதியாக சறுக்கினாலும், பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக் குவித்து பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. விஜய் சேதுபதி, சமந்தா, ரெடின் கிங்ஸ்லி, நயன்தாரா, ஸ்ரீசாந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நயன்தாரா, நடிப்பில் உருவாகி உள்ள படம் ஓ2. இப்படத்தை ஜி.எஸ்.விக்னேஷ் என்பவர் இயக்கி உள்ளார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ள இவர் இயக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.
தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் நடிகை நயன்தாரா, 8 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்துள்ளார். நயன்தாராவின் மகனாக யூடியூப் பிரபலம் ரித்விக் நடித்துள்ளார்.