தனுஷ் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் படம் இட்லி கடை. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். திருச்சிற்றம்பலம் படத்திற்குப் பிறகு தனுஷ் - நித்யா மேனன் இருவரும் இணையும் படம் இதுவாகும். அதுமட்டுமின்றி தனுஷ் இயக்கும் நான்காவது படமும் இதுவே. சாலினி பாண்டே மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வொண்டர்பார் பிலிம்ஸ், டான் பிக்சர்ஸ் பேனர்களில் ஆகாஷ் பாஸ்கரனும் தனுஷும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
24
இட்லி கடை படக்குழு
ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பு, ஜாக்கி கலை இயக்கம், பி.சி. ஸ்டண்ட்ஸ் சண்டைப்பயிற்சி, பாபா பாஸ்கர் நடன இயக்கம், காவ்யா ஸ்ரீராம் ஆடை வடிவமைப்பு, பிரவீன் டி. விஷுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வை, பி. ராஜ் ஒப்பனை என அனுபவம் வாய்ந்த டெக்னீஷியன்கள் பலர் இப்படத்தில் பணியாற்றி உள்ளனர். இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் சார்பில் இன்பன் உதயநிதி தமிழ்நாட்டில் வெளியிடுகிறார். அவர் தலைமை பொறுப்பேற்ற பின்னர் வெளியிடும் முதல் படம் இதுவாகும்.
34
தனுஷ் இயக்கிய படங்கள்
தனுஷ் நடிக்கும் 52-வது படம் இது. பா. பாண்டி, ராயன், நிலாவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகியவை தனுஷ் இயக்கத்தில் இதற்கு முன் வெளியான படங்கள். இதில் நிலாவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் மட்டும் தனுஷ் நாயகனாக நடிக்கவில்லை. மற்றபடி அவர் இயக்கிய மூன்று படங்களிலும் அவரே நாயகனாக நடித்திருந்தார். இதில் தனுஷின் 50வது படமாக ராயன் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. தனுஷின் கெரியரில் அதிக வசூல் அள்ளிய படம் என்கிற பெருமையையும் ராயன் பெற்றிருக்கிறது.
இந்த நிலையில், அந்த சாதனையை முறியடிக்கும் முனைப்போடு இட்லி கடை திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 1ந் தேதி திரைக்கு வர உள்ளது. அப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், தற்போது அப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 14ந் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றே படத்தின் டிரெய்லரும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. கடந்த முறை குபேரா ஆடியோ லாஞ்சில் தனுஷ் பேசியது விமர்சனத்துக்குள்ளான நிலையில், இந்த முறை என்ன பேசப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.