
2025-ம் ஆண்டு தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் அள்ளிய படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் தமிழ் படங்களுக்கு போட்டியாக ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1 திரைப்படமும் இடம்பெற்று உள்ளது. அதோடு இந்த ஆண்டு தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய படங்கள் இரண்டு தான், எஞ்சியுள்ள படங்கள் அனைத்துமே 50 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கின்றன. அதோடு தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் என்பதையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்த படம் பைசன் காளமாடன். இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்தது. உலகளவில் 70 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.52 கோடி வசூலித்து இந்த பட்டியலில் 10ம் இடத்தை பிடித்துள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தீபாவளி விருந்தாக வந்த படம் தான் டியூட். இப்படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கி இருந்தார். மமிதா பைஜு, சரத்குமார் ஆகியோரும் நடித்திருந்த இப்படம் உலகளவில் ரூ.114 கோடி வசூலித்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 55 கோடி வசூலித்து 9-ம் இடத்தில் உள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் திரைக்கு வந்த படம் மதராஸி. உலகளவில் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய இத்திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ.57 கோடி வசூலித்து, இந்த பட்டியலில் 8-ம் இடத்தை பிடித்திருக்கிறது.
2025-ம் ஆண்டு விஜய் சேதுபதிக்கு பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த படம் தான் தலைவன் தலைவி. பாண்டிராஜ் இயக்கிய இப்படம் கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்தது. இப்படமும் உலகளவில் 100 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இதன் தமிழ்நாடு வசூல் 59 கோடியாம். இப்படம் 7ம் இடத்தில் உள்ளது.
தமிழ்சினிமாவில் இந்த ஆண்டு சர்ப்ரைஸ் ஹிட் அடித்த படம் என்றால் அது டூரிஸ்ட் ஃபேமிலி தான். இப்படத்தை அபிஷன் ஜீவிந்த் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். சசிகுமார், சிம்ரன் ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 63 கோடி வசூலித்து இப்பட்டியலில் 6ம் இடத்தில் உள்ளது.
டாப் 10 பட்டியலில் இடம்பெற்ற ஒரே ஒரு பிற மொழி படம் என்றால் அது காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் தான். ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த இப்படம் உலகளவில் 840 கோடிக்கு மேல் வசூலித்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 72 கோடி வசூலித்து 5-ம் இடத்தை பிடித்துள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இந்த ஆண்டு பிப்ரவரியில் திரைக்கு வந்த படம் டிராகன். இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார். இப்படம் உலகளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் இதற்கு 78 கோடி வசூல் கிடைத்தது. இதனால் இப்படம் 4ம் இடத்தில் உள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரித்த இப்படம் இந்த ஆண்டு பிப்ரவரியில் ரிலீஸ் ஆகி உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ.137 கோடி வசூலித்திருந்தது. இதன் தமிழ்நாடு வசூல் ரூ.79 கோடியாம். இதன்மூலம் இப்படம் 3-ம் இடத்தை பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் கூலி தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்தது. இப்படம் உலகளவில் ரூ.520 கோடி வசூலித்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.147.2 கோடி வசூல் அள்ளி 2ம் இடத்தில் உள்ளது.
2025-ம் ஆண்டு தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் அள்ளிய படம் என்றால் அது அஜித்தின் குட் பேட் அக்லி தான். இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.152.20 கோடி வசூலித்ததே சாதனையாக உள்ளது. இந்த சாதனையை இதுவரை எந்த படமும் முறியடிக்கவில்லை. அடுத்த இரண்டு மாதங்களிலும் இச்சாதனையை முறியடிக்கும்படியான படங்கள் இல்லை. இதனால் இந்த அண்டு தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக அஜித் தான் இருக்கிறார்.