
ஆர்யா: கபிலன்
'சார்பட்டா பரம்பரை' என்றதுமே முதலில் நினைவுக்கு வருபவர் கதாநாயகனாக நடித்துள்ளது நடிகர் ஆர்யா தான். இந்த படத்தில் கபிலனாகவே வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக பாக்ஸிங் விளையாட்டு வீரராக மாற தன்னுடைய உடலை கட்டு மஸ்தாக ஏற்றி, பிரமிக்க வைத்துள்ளார். படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இவரது நடிப்பு அபாரம். அதற்க்கு ஏற்றாப்போல் படத்தை பார்த்து, பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். படத்தில் ரிங்க்குள் ஆர்யாவை நிர்வாணமாக்கி அவமதிக்கும் காட்சியின் போது நம்மையும் தாண்டி உணர்ச்சி பொங்குகிறது, அந்த அளவிற்கு நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
பசுபதி: ரங்கன் வாத்தியார்
கதாநாயகனை தொடர்ந்து ரசிகர்களை கவனிக்க வைத்துள்ள கதாபாத்திரம் என்றால் அது ரங்கன் வாத்தியாராக நடித்துள்ள பசுபதி தான். பாக்ஸிங் சொல்லி கொடுக்கும் போது காட்டும் முரட்டுத்தனம், ஒவ்வொரு காட்சிகளிலும் நிதானத்துடன் முடிவெடுக்க வேண்டும் என்பதன் வெளிப்பாடு சூப்பர். ஒரு திமுக தொண்டராகவும் தன்னுடைய நடிப்பை அபாரமாக வெளிப்படுத்தியுள்ளார்.
1970களில் ஒரு திமுக தொண்டர் எப்படி இருப்பார் என்பதை தன்னுடைய நடை, உடை, பாவனைகள் மூலமாக கண்முன் காட்டியுள்ளார்.
ஜான் கோகென்: வேம்புலி
ஆர்யாவுக்கு நிகராக பாக்ஸராக மிரட்டியுள்ளார், பிரபல மலையாள நடிகர் ஜான் கோகென். இதுவரை தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த இவருக்கு இந்த படத்தின் மூலம் பல வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவரது நடிப்பை பார்த்து, தல அஜித்தே போன் செய்து வாழ்த்தியுள்ளார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
ஷபீர் கல்லறைகள்: டான்சிங் ரோஸ்
டான்ஸ் அசைவால் இப்படி கூட பாக்ஸிங் செய்து அசத்த முடியுமா என, ரசிகர்களை வியர்ந்து பார்க்கவைத்துள்ளார் ஷமீர். ரிங்கில் ஏறி ஒரே ஒரு சண்டை போட்டாலும், ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து விட்டார். இவரை வைத்தே தனியாக ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்றும், இவரது பாக்சிங் காட்சிகள் அதிகப்படுத்தி இருக்கலாம் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். படத்தை பார்த்ததும், பலர் அதிகம் தேடியது ஷபீரை பற்றி தான்.
துஷாரா விஜயன் : மாரியம்மாள்
நடிகை துஷாரா விஜயன் ஏற்கனவே, 'போதை ஏறி புத்தி மாறி' என்கிற படத்தில் நடித்திருந்தாலும், 'சார்பட்டா பரம்பரை' தான் இவருக்கு சிறந்த அறிமுகத்தை கொடுத்துள்ளது. கபிலனின் மனைவி மாரியம்மாவாக நடிப்பில் மிரட்டியிருக்கிறார். சென்னை பாஷையில் அசால்ட் காட்டுவது முதல், ஆர்யாவை மிரட்டுவது, ‘உன்ன விட்டு எங்க போவேன்’ என கொஞ்சுவது... என்று பலரையும் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அனுபமா குமார்: பாக்கியம்
தன்னுடைய கணவர் போலவே பாக்ஸிங் கற்று கொண்டால் மகனும் ரௌடியாகி விடுவானோ என்றும், அவனையும் இழந்து விடுவோமோ என்ற அசத்துடனும் கபிலனை பாக்சிங் பக்கமே போக விடாத கண்டிப்பான தாயாக நடித்துள்ளார். அதே நேரத்தில் தன்னுடைய மகன் பாக்ஸிங் கற்று கொண்டால் தான் மது பழக்கத்தில் இருந்து, வெளியே வர முடியும் என, புதிய பயிற்சியாளரை வைத்து மகனுக்கு பயிற்சி அளிக்க சொல்வதும், அவ்வப்போது டாடியிடம், ஆங்கிலத்தில் பேசி அவரை மிரட்டுவது என இவரது நடிப்பு அபாரம்.
கலையரசன்: வெற்றி செல்வன்
பா.ரஞ்சித் படம் என்றாலே... அதில் ஒரு சிறு கதாபாத்திரத்திலாவது கலையரசன் நடித்து விடுவார். அந்த வகையில் சார்பட்டா படத்திலும் கலையரசன் வெற்றி செல்வன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரங்கன் வாத்தியார் மகனாக இருந்தாலும், இவரிடம் நிதானம் இல்லாததால் கடைசி வரை ரிங் ஏறி பாக்சிங் போட சம்மதிக்காத தந்தையால், ஒரு கட்டத்தில் திசை மாறி சாராயம் காய்ச்ச துவங்கி விடுகிறார். ஆனால் கடைசியில் கபிலனை போட்டியில் பங்கேற்க செய்ய இவர் உதவுவது ஹார்ட் டச்சிங் மொமெண்ட். மொத்தத்தில் தன்னுடைய தடிப்பை சரியாக வெளிப்படுத்தியுள்ளார் கலையரசன்.
சந்தோஷ் பிரதாப்: ராமன்
ரங்கன் வாத்தியாரின் நம்பகமான சிஷ்யன் ராமன், கபிலன் கோவத்தை தூண்டும் வகையில் வாயை விட்டு பாக்ஸிங் தெரியாத போதே அவரிடம் அடி வாங்குவது, ஆர்யா தோற்று விட வேண்டும் என, தன்னுடைய மாமனுடன் சேர்ந்து செய்யும் வில்லத்தனம் அல்டிமேட்.
ஜான் விஜய் : கெவின் & டாடி
பல படங்களில் வில்லத்தனம் மற்றும் காமெடியனாகவே பார்த்த ஜான் விஜய் இந்த படத்தில், டாடி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆர்யா கூடவே இருப்பவர்... அதிலும் அவர் ஆங்கிலோ இந்தியன் மொழி பேசுவது வேற லெவலில் இருக்கும். ஒவ்வொரு சீனிலும் நிறைவான நடிப்பால் கவர் செய்துள்ளார்.
ஜி.எம்.சுந்தர் : துரை கண்ணு வாத்தியார்
பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள ஜி.எம்.சுந்தர் படத்தில் இடியப்ப பரம்பரையின் வாத்தியாராக வருகிறார். 'சார்பட்டா பரம்பரையே' இருக்க கூடாது, என சொல்லி சொல்லி வேம்புலியை வளர்த்து... பசுபதிக்கு நிகரான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
சஞ்சனா நடராஜன்: லட்சுமி
கலையரசன் மனைவியாக நடித்து கணவரின் ஆசைக்காக மாமியார் - மாமனாரிடம் சண்டை போடும் எதார்த்தமான மருமகளாக அசத்தி இருப்பார் சஞ்சனா. இவர் மட்டும் இன்றி... இந்த படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர்களின் அனைவரின் நடிப்புமே அபாரம்.