திரைத்துறையில் வெகு சில நடிகர்களே மொழி எல்லைகளை கடந்து, இந்தியா முழுதும் மிளிரும் நட்சத்திரமாக, மின்னும் திறமை பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் மின்னும் நடிகர்கள் வெற்றிகளையும், பாராட்டுக்களையும் மட்டும் குவிப்பதில்லை, ரசிகர்களின் அன்பையும் சேர்த்தே வெல்கிறார்கள். அந்த வகை நடிகர்களை தனித்துவமாக்குவது, அவர்களிம் அடுத்த வீட்டு பையன் போன்ற லுக்கும், அவர்களின் இயல்பு மிகு, நேர்த்தியான நடிப்புமே ஆகும்.
இந்த வரிசையில், பாலிவுட்டில் பெரும் நட்சத்திரங்களும், திறமையான தொழில்நுட்ப கலைஞர்களும் இணையும், பிரம்மாண்ட படத்தில் இணைந்து, புதிதாக பாலிவுட்டில் தனது பயணத்தை துவங்கியுள்ளார் நடிகர் மஹத் ராகவேந்திரா.
இயக்குநர் சத்ரம் ரமணி இயக்கத்தில், முதாஸ்ஸர் அஜிஸ் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கும், புதிய திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நாயகனாக அறிமுகமாகிறார் மஹத் ராகவேந்திரா. மங்காத்தா புகழ் நடிகர் மஹத் ராகவேந்திரா, இப்படத்தில் நடிகர் ஜாஹிர் இக்பாலுடன் இணைந்து மற்றொரு நாயகனாக நடிக்கின்றார். பாலிவுட்டின் பெரும் நட்சத்திரங்களான சோனாக்ஷி சின்ஹா, ஹீமா குரேஷி ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்டத்திற்காக 30 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பை முடித்து, படப்பிடிப்பின் அற்புதமான தருணங்களால் பெரும் உற்சாகத்திலிருக்கும் நடிகர் மஹத் ராகவேந்திரா படம் குறித்து கூறியதாவது…
முதலில் பாலிவுட்டின் பெரும் திறமையாளரான முதாஸ்ஸர் அஜிஸ் போன்றவருடன் இணைந்ததற்கு கடவுளுக்கு நன்றி. மொத்த படக்குழுவும் ஒரு குடும்பத்தில் இருப்பது போலான உணர்வையே எனக்கு தந்தார்கள். எந்த ஒரு கதாப்பாத்திரத்திலும் தனித்துவமாக மின்னும், பாலிவுட்டின் பெரும் நட்சத்திரங்களான சோனாக்ஷி சின்ஹா, ஹீமா குரேஷி ஆகியோருடன் நடிக்க முதலில் எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. படப்பிடிப்பில் ஒரு எந்த ஒரு காட்சியாக இருந்தாலும், ஒரு டேக்கில் நடித்து விடும் அவர்களின் மாயாஜாலத்தை நேரில் அனுபவித்தேன்.
இருவருமே தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் நடித்து புகழ் பெற்றவர்கள். இருவரும் மிகப்பெரிய நட்சத்திரங்களானாலும், என்னிடம் இயல்பாக பழகி, படப்பிடிப்பில் என்னை மிக இலகுவாக உணரவைத்து, நான் நன்றாக நடிக்க நம்பிக்கை தந்தார்கள். நான் நடிகர் ஜாஹிர் இக்பால் உடன் மற்றொரு நாயகனாக இணைந்து நடிக்கிறேன். ஆனால் இப்போது அவரை சக நடிகர் என்பதை விட, ஒரு சகோதரர் என்றே கூற முடியும். அந்தளவு படப்பிடிப்பில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். இன்னும் அவருடன் படப்பிடிப்பில் இணைந்து நடித்து கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பு தளம் எப்போதும் மிக உற்சாகமாகவே இருக்கும். இவர்களுடன் இணைந்து, இன்னும் பல சிறந்த அனுபவங்களை பெற ஆவலுடன் காத்திருக்கிறேன்.
சில மாதங்களுக்கு முன்னர், பாலிவுட் படத்தயாரிப்பில் உள்ள, நண்பர் சுதீஷ் சென் நான் பாலிவுட் படங்களிலும் முயற்சிக்க வேண்டும் என அறிவுரை தந்தார். அவரது அறிவுரையின் பேரில், நானும் சில பாலிவுட் படங்களின் ஆடிசனில் பங்கேற்றேன். பிறகு தமிழ் திரைத்துறையில் எனது கவனத்தை செலுத்த ஆரம்பித்துவிட்டேன். ஒரு நாள் முதாஸ்ஸர் அஜிஸ் அவரது படத்தில் நடிக்க புதிய நாயகனை தேடுவதாகவும், அவருக்கு எனது விவரங்களை அனுப்பும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டேன்.
எதிர்பாரா ஆச்சர்யமாக படக்குழு முழு திரைக்கதையையும் எனக்கு அனுப்பினர், பின் முதாஸ்ஸர் அஜிஸ் ஜூம் மீட்டிங்கில் முழுக்கதையையும் எனக்கு விவரித்தார். இந்த தருணத்தில் நண்பர் சுதீஷ் சென், ஆஷிஷ் சிங் மற்றும் தயாரிப்பாளர்களான Vipul shahs optimystyx Ashwin varde மற்றும் rajesh Bahl wakhaoo film ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் நான் இப்படத்தில் நடிப்பதற்கு பெரும் துணையாய் இருந்தனர்.
லண்டனில் 30 நாட்கள் படப்பிடிப்பை முடித்து விட்டு, தற்போது டெல்லியில் தனது கதாபாத்திரத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பில் பங்குகொண்டுள்ளார் மஹத் ராகவேந்திரா. இந்த மொத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அனுபவமும், கனவில் மிதப்பது போன்ற அழகிய தருணமாக, அவர் கொண்டாடும் நேரத்தில், இந்தி மொழியை அவர் கையாண்டது குறித்து கேட்டபோது…அதற்கு அவர் மனைவி பிராச்சி மிஸ்ராவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்றும், அவர் தான் இந்தி மொழி வழக்கில் தனக்கு டிரெய்னிங் தந்ததாகவும். அதன் பிறகு பிரத்யேகமாக இதற்கென நிறைய பயிற்சிகள் மேற்கொண்டதாகவும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்.. இப்படம் குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. ஆனால் இது பெண்களுக்காக ஒரு செய்தியை அழுத்தமாக கூறும் படம். இறுதியாக… இது நான் நினைத்தே பார்த்திராத, ஒரு கனவு குழுவுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். இந்த அற்புதமான அனுபவத்திற்காக கடவுளுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.