
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் முரளி. ஒரு தலைக் காதல் குறித்த படங்களில் நடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தை தன் பக்கம் கவர்ந்து வைத்திருந்தார். ஆனால் சிறு வயதிலேயே அவர் காலமானதை தொடர்ந்து அவரது மகன் அதர்வா படங்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக அதர்வா விளங்கி வருகிறார். பல படங்களில் நடித்திருக்கும் அதர்வா ‘பரதேசி’ படத்திற்க்குப் பின் ஒரு முழுமையான வெற்றியை பதிவு செய்யாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடிப்பில் வெளியாகியுள்ள டிஎன்ஏ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. வித்தியாசமான கதையம்சத்துடன் கூடிய இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், கருணாகரன், ரித்விகா ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் தான் டிஎன்ஏ. இதன் பின்னணி இசையை ஜிப்ரான் அமைத்துள்ளார். இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்கள் ஐந்து பேர் இசை அமைத்துள்ளனர். ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘ஃபர்ஹானா’ போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசனின் படம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. படம் ஜூன் இருபதாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தனுஷ் நடிப்பில் வெளியான குபேராவும், அதர்வாவின் டிஎன்ஏ திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது. குபேரா திரைப்படம் மூன்று நாட்களில் ரூ.50 கோடி வசூலை நெருங்கி இருக்கும் நிலையில் டிஎன்ஏ திரைப்படம் குறைவான வசூலையே பெற்றுள்ளது.
காதல் தோல்வியால் குடித்துக்கொண்டு ஊதாரியாக சுற்றிக் கொண்டிருக்கும் இளைஞரான அதர்வாவுக்கு நிமிஷா சஜயனை திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்திற்குப் பின்னர் திருந்தி வாழும் அதர்வாவுக்கு சில மாதங்களில் குழந்தையும் பிறக்கிறது. ஆனால் மருத்துவமனையில் இது தன்னுடைய குழந்தை இல்லை என்று நிமிஷா வாதங்களை முன்வைக்கிறார். அவர் சொல்வதற்கு பின்னால் ஏதோ உண்மை இருக்கிறது என தெரிந்து கொள்ளும் அதர்வா டிஎன்ஏ டெஸ்ட் எடுக்குமாறு கோரிக்கை விடுகிறார். டிஎன்ஏ டெஸ்ட் முடிவில் அது அதர்வாவுடைய குழந்தை இல்லை என்பது தெரிய வருகிறது. அதன்பின்னர் என்ன நடந்தது? அதர்வாவுக்கும் நிமிஷாவுக்கும் பிறந்த குழந்தை என்ன ஆனது? என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை.
இந்தப் படம் பல இடங்களில் இதயத்தை தொடும் தருணங்களுடன் நிரம்பி இருக்கிறது. இரண்டாம் பாதியில் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் தொடங்கும் போது படம் விறுவிறுப்புக்கு மாறுகிறது. இரண்டாம் பாதியில் சில இடங்களில் தொய்வு ஏற்பட்டாலும் கடைசி 20 நிமிடங்களில் நேர்த்தியான க்ளைமேக்ஸ் அமைக்கப்பட்டு இருந்தது. அதர்வா நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சரியான கதாபாத்திரத்தை தேர்வு செய்துள்ளார். அதை கச்சிதமாக பிடித்துக்கொண்டு, இந்த படத்தின் மூலமாக ஸ்கோர் செய்துள்ளார். காதல் தோல்வியில் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் இடங்களிலும், குழந்தையை பிரிந்து தவிக்கும் நிமிஷாவை கட்டிக்கொண்டு அழும் காட்சிகளிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கதாநாயகி நிமிஷா சஜயனின் நடிப்பு இந்த படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. எந்த இடத்திலும் ஓவர் ஆக்டிங் செய்யாமல் காட்சிகளுக்கு தேவையான நடிப்பை வழங்கி கலக்கி இருக்கிறார். சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சேத்தன், விஜி சந்திரசேகர், ரமேஷ் திலக் ஆகியோர் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். குழந்தைகளை திருட்டும் பாட்டி உட்பட அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்தில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினர். சில லாஜிக் மீறல்கள் உள்ளிட்ட குறைகள் இருந்தாலும் குழந்தை கடத்தல்கள், அது குறித்த பின்னணி போன்றவற்றை விறுவிறுப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் டிஎன்ஏ திரைப்படம் காட்டியிருக்கிறது. இந்த திரைப்படத்தை பலரும் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் மூன்று நாட்கள் முடிவில் இந்த படம் மிக சொற்ப வசூலையே கொடுத்திருக்கிறது.
பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை வெளியிடும் சாக் நிக் வலைதளத்தின் அறிக்கையின்படி முதல் நாளில் இந்த படம் ரூ.40 லட்சமும் இரண்டாவது நாளில் ரூ.93 லட்சமும் மூன்றாவது நாளில் ரூ.1.24 கோடியும் மட்டுமே வசூலித்துள்ளது. இதுவரை சுமார் ரூ.2.59 கோடி மட்டுமே வசூல் ஆகியுள்ளது. இருப்பினும் குறைந்த பட்ஜெட்டில் உருவான திரைப்படம் என்பதால் இந்த வசூல் படக்குழுவினருக்கு சற்று ஆறுதலைக் கொடுத்துள்ளது. டிஎன்ஏ படம் குறித்து தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியாகி வருவதால் இன்னும் சில தினங்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.