ராஜமவுலி இயக்கத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதம் ரிலீசான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராமராஜு மற்றும் கொமரம்பீன் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை பிரம்மாண்டமாக இயக்கி இருந்தார் ராஜமவுலி. இதில் கொமரம்பீமாக ஜூனியர் என்.டி.ஆரும், சீதாராம ராஜுவாக ராம்சரணும் நடித்திருந்தனர்.
பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து அதகளப்படுத்திய இப்படத்தை உலக அளவில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த இயக்குனர்களும், நடிகர்களும் பார்த்து பாராட்டி இருந்தனர். அதுமட்டுமின்றி இப்படம் இந்த ஆண்டு ஆஸ்கர் விருதை வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. பிரபல ஹாலிவுட் பத்திரிகையான வெரைட்டி கடந்த சில மாதங்களுக்கு முன் விருதுகிடைக்க வாய்ப்புள்ள நடிகர், நடிகைகளின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் சிறந்த துணை நடிகருக்கான விருதை ஜூனியர் என்.டி.ஆரும், சிறந்த இயக்குனருக்கான விருதை ராஜமவுலியும் வெல்ல வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தற்போது அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள மற்றொரு பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஹீரோவாக நடித்த ராம்சரணுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி இப்படத்தில் இடம்பெறும் நட்பு பாடலுக்கும் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறும் பல்வேறு பிரிவுகளில் ஆர்.ஆர்.ஆர். படம் இடம்பெற்று உள்ளதால் நிச்சயம் ஒரு ஆஸ்கர் விருதையாவது வெல்லும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... சோசியல் மீடியாவில் டிரெண்டான பொன்னியின் செல்வன் சேலைகள்... விற்பனைக்கு திடீர் தடை விதிப்பு - காரணம் இதுதான்