போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு, மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை மருந்து பார்ட்டி கொண்டாட படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அக்டோபர் 2 ஆம் தேதி சோதனை செய்த போது, ஷாருகானின் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் அக்டோபர் 3 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
ஆர்யன் கானிடம் இருந்து போதை பொருட்கள் எதுவும் கைப்பற்ற பட வில்லை என்றாலும், சிலரிடம் இருந்து இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதை மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டதால், சர்வதேச போதை கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்குமோ? என்கிற கோணத்தில் தொடர்ந்து NCB அதிகாரிகள் விசாரணையை துவங்கினர்.
இந்த 8 பேரிடமும் நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்கு பின்னர், அக்டோபர் 8 ஆம் தேதி மும்பை ஆதார் சாலை சிறையில் அடைக்கப்பட்டார் ஆர்யன் கான்.
ஆர்யன் கான் கைது சம்பவம் ஷாருகான் குடும்பத்தை மட்டும் இன்றி, ஒட்டு மொத்த பாலிவுட் திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஷாருகான் தன்னுடைய அனைத்து பணிகளையும் புறக்கணித்துவிட்டு, மகனை ஜாமீனில் எடுக்கும் முயற்சியில் இறங்கினார்.
மேலும் பல பாலிவுட் பிரபலங்கள் பாந்த்ராவின் அமைந்துள்ள ஷாருகானின் 'மன்னத்' இல்லத்திற்கு வருகை தந்து, ஷாருகானின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வந்தனர். அதே போல் தினம் தோறும் ஷாருகானின் ரசிகர்கள் பலர் மன்னத் முன்பு கூடி வருவதும் வாடிக்கையாக இருந்து வந்தது.
பல முறை ஆர்யன் கான் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நேற்று (அக்டோபர் 28 ) மும்பை உயர் நீதி மன்றத்தில், ஆர்யன் கான் உட்பட 3 பேருக்கு ஜாமீன் வழங்கினார் நீதிபதி நிதின்.
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணைக்காக வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியை ஷாருக் கான் லண்டனில் இருந்து வரவழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாமீன் வழங்குவதாக அறிவித்தவுடன் ஷாருக் கானின் மற்றொரு வழக்கறிஞர் சதீஷ் ரொக்க ஜாமீனில் ஆர்யனை விடுவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு, நீதிபதி நிதின் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
ஆர்யன் கான் ஜாமீன் மீதான நிபந்தனைகள் இன்று வெளியாக உள்ள நிலையில், சட்ட நடவடிக்கைகளை முடித்து ஆர்யன் நாளைய தினம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வருவார் என எதிர்பாக்கப்படுகிறது.
பல கட்ட போராட்டத்திற்கு பின் ஆர்யனுக்கு வழங்க பட்டுள்ள ஜாமீனுக்காக, இந்த வழக்கில் ஆஜரான அனைத்து வழக்கறிஞர்களையும் 'மன்னத்தில் ' சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார் ஷாருகான். அப்போது சுமார் 3 வாரங்களுக்கு பின் அவரது முகத்தில் புன்னகை எட்டி பார்த்ததையும் பார்க்க முடிந்தது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.