சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் நடிகர், நடிகைகள் அந்த பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில், நயன்தாரா, விஜய், சமந்தா, அஜித் போன்ற டாப் நடிகர், நடிகைகள் ஏராளமான பிசினஸ் செய்து சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையில் ஓட்டல் பிசினஸ் நடத்தி அதன் மூலம் பெத்த லாபம் பார்த்து வரும் தமிழ் சினிமா நடிகர், நடிகைகளை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சூரி
தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் சூரி, மதுரையில் ஓட்டல் பிசினஸ் செய்து வருகிறார். இவர் மதுரையில் அம்மன் மெஸ் என்கிற சைவ உணவகத்தை நடத்தி வருகிறார். இவர்களுக்கு மதுரையில் ஏராளமான கிளைகளும் உள்ளன. இந்த பிசினஸை சூரியின் குடும்பத்தினர் தான் கவனித்து வருகிறார்கள்.
ஆர்யா
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவருக்கும் சொந்தமாக ஹோட்டல் உள்ளது. அதன்படி ஷீ ஷெல் என்கிற ஹோட்டலை தான் ஆர்யா நடத்தி வருகிறார். சென்னையில் வேளச்சேரி மற்றும் அண்ணாநகர் ஆகிய இடங்களில் ஆர்யாவின் ஓட்டல் செயல்பட்டு வருகிறது.
ஜீவா
நடிகர் ஜீவா தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. இவரும் சென்னையில் சொந்தமாக ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். ஒன் எம்பி என்ற பெயர் கொண்ட அந்த ரெஸ்டாரண்ட் தி நகரில் செயல்பட்டு வருகிறது. அந்த ரெஸ்டாரண்டை அவரது மனைவி தான் நிர்வகித்து வருகிறார்.
ஆர்.கே.சுரேஷ்
தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பல படங்களை தயாரித்தவர் ஆர்.கே.சுரேஷ். இவர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படம் மூலம் வில்லனாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் வில்லனாக மிரட்டினார். இவரும் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். சாப்பிடலாம் வாங்க என்கிற பெயர் கொண்ட இந்த ஓட்டல் கேகே நகரில் செயல்பட்டு வருகிறது.