
இந்திய இசை உலகில், தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், மிக அரிதாகவே குடும்ப விஷயங்களை பொதுமக்கள் முன் பகிர்பவர். ஆனால் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், தனது வெற்றியும் புகழும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி பகிர்ந்துள்ளார். குறிப்பாக, அவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததன் பின்னணி காரணம் குறித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான், தனது மனைவி சாய்ரா பானுவுடன் 29 ஆண்டுகள் வாழ்த்து 3 குழந்தைகளையும் பெற்றெடுத்த நிலையில், கடந்த ஆண்டு திடீர் என தன்னுடைய விவாகரத்து குறித்து அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல என்றும், அது அவர்களது வாழ்க்கையில் நீண்ட காலமாகப் படிந்து வந்த அழுத்தங்களின் விளைவாக ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். தனது மூன்று குழந்தைகளும் தற்போது சாய்ரா பானுவுடன்தான் வசித்து வருகிறார்கள் என்பதையும் கூறி இருந்தார்.
இசையைத் தொழிலாக அல்ல, ஒரு கடமையாகவே பார்க்கும் ரகுமான், தனது ஸ்டுடியோவில் இருந்தே பெரும்பாலும் வெளியேறுவதில்லை. ஒரு குறிப்பிட்ட அளவு தனிமையில் இருப்பது தன்னிற்குத் தேவையானது என்றாலும், அது அவரது குடும்பத்துடனான நேரத்தைத் தடுக்கும் ஒரு காரணமாக மாறிவிட்டதாக அவர் கூறியுள்ளார். “குடும்பத்தோடு நான் வெளியே சென்றாலும் என்னை ஒரு சினிமா பிரபலமாகவே மக்கள் பார்க்கிறார்கள். நான் ஒரு சாதாரண மனிதன் அல்ல” என்ற உணர்வு தான் அது குடும்பத்தினருக்கு ஏற்படுத்துகிறது.
பொது இடங்களில் ரசிகர்களின் அளவற்ற நேசம், சில நேரங்களில் தனிப்பட்ட சுதந்திரத்தை கெடுகிறது. உணவு சாப்பிடும்போது கூட ‘ஒரு செல்பி, ஒரு புகைப்படம்’ என்ற கோரிக்கைகளிலிருந்து தப்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். “நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லியும், ரசிகர்கள் அது முடியும் வரை காத்திருக்க விரும்புவதில்லை. அவர்கள் அன்பை நான் மதிக்கிறேன், ஆனால் அதை சமாளிப்பது எப்போதும் கடினமே,” என்று அவரது சொற்களில் ஒரு உணர்ச்சி கலந்த வெளிப்பாடு தெரிந்தது.
இதன் எதிர்மறை தாக்கம் குடும்பத்திற்கே அதிகம் என்று ரகுமான் வேதனையுடன் குறிப்பிட்டார். குழந்தைகள் சிறிய வயதிலிருந்தே என்னுடன் தனிப்பட்ட நேரம் செலவிட முடியாத சூழ்நிலை இருந்தது. குடும்பமாக ஒன்று கூடுவதும் மிகக் குறைவு. “ஒவ்வொருவருக்கும் அவரவருடைய வேலை, பொறுப்புகள் என அனைவரும் அவரவரது வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார்கள். ஒரே டேபிளில் உட்கார்ந்து உணவருந்துவது கூட ஒரு பெரிய நிகழ்வாக மாறிவிட்டது,” என்று அவர் கூறிய விதம் அவரது குடும்பத்திற்கான ஆர்வத்தையும் கவலையையும் வெளிப்படுத்தியது.
இசைத் துறையில் உள்ள இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள் – அனைவருடனும் நெருக்கமான உறவு இருந்தாலும், வேலைப்பளு காரணமாக நண்பர்களுடனும் கூட நேரம் செலவிட முடியாத நிலை உருவாகியிருப்பதாக ரகுமான் தெரிவித்துள்ளார். “எல்லோரும் என் நண்பர்கள், ஆனால் நண்பர்களோடு நேரம் செலவிட முடியாத நண்பன் நான்தான்,” என்று சிறிது நகைச்சுவையோடு வருத்தத்தையும் கூறினார்.
மேலும், ஹாலிவுட் பிரபலங்கள் ரசிகர்களின் தனியுரிமை மீறல் நடந்தால் கடுமையாக எதிர்ப்பது போன்ற பழக்கம் இந்தியாவில் இல்லை என்றும், அவர் சுட்டிக்காட்டினார். “அங்கே யாராவது விதிமீறி புகைப்படம் எடுக்க முயன்றால் நடிகர்கள் நேரடியாக கண்டிப்பார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி நடப்பதே இல்லை; என அவர் கூறினார். இசை உலகில் ஏ ஆர் ரகுமான் உலக அளவில் புகழ்பெற்றவர் என்றாலும், இந்த நேர்காணல் மூலம் ஏ ஆர் ரகுமானின் மனிதரீதியான பக்கத்தை அறிந்து கொள்ள முடிவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படி தொடர்ந்த பிரச்சனை தான் இவரின் விவாகரத்துக்கு காரணம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.