பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1942ம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் பிறந்த இவர், ரசிகர்களால் செல்லமாக மில்லினியம் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இன்று பலகோடிக்கு அதிபராக இவர் இருந்தாலும், ஆரம்ப காலகட்டத்தில் சொந்த வீடு கூட இல்லாததால், நகைச்சுவை நடிகர் மெஹ்மூத்தின் வீட்டில் அவர் தங்க வேண்டிய நிலை இருந்தது.
பின்னர் சினிமாவில் படிப்படியாக முன்னேறி முன்னணி நடிகரான அமிதாப் பச்சன், தற்போது மும்பையில் மட்டும் 7 பங்களாக்களை வைத்துள்ளார். மும்பையில், அமிதாப் குடும்பத்துடன் ஜூஹூ பகுதியில் வசிக்கிறார், ஆனால் இது தவிர அவருக்கு மேலும் 6 இடங்களில் வீடுகள் உள்ளன. வீடுகள் வாங்குவதில் அமிதாப்புக்கு மிகுந்த விருப்பம் இருப்பதாகவும், இதனால்தான் கடந்த 2-3 ஆண்டுகளில் மேலும் இரண்டு வீடுகளை அவர் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
அமிதாப் பச்சனின் சொத்துக்கள், கார்கள், பேனாக்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் அவருக்கு சொந்தமான பங்களாக்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சுமார் 3500 கோடி சொத்துக்கு சொந்தக்காரர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஆண்டுக்கு 60 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கிறார். திரைப்படங்கள் மூலம் மட்டுமல்லாமல் விளம்பரங்கள், கேபிசி, மற்றும் தனது வீட்டை வாடகைக்கு விட்டும் சம்பாதித்து வருகிறார்.
அமிதாப் பச்சன் தற்போது வசிக்கும் பங்களா மும்பையின் ஜூஹூ பகுதியில் உள்ளது. இரண்டு மாடிகள் கொண்ட இந்த பங்களா சுமார் 10,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த பங்களாவின் விலை மட்டும் சுமார் ரூ.120 கோடியாம். இந்த பங்களாவில் ரூ.4 கோடி மதிப்புள்ள ஓவியமும் இடம்பெற்று உள்ளது. இந்த பங்களாவில் உள்ள கோவிலில் தங்கம் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்ட கடவுள் சிலைகள் உள்ளனவாம். இந்த பங்களாவிற்கு ஜல்சா என பெயரிட்டுள்ளார் அமிதாப்.
இதையும் படியுங்கள்... என்னவேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன் - சர்ச்சைகளுக்கு சைலண்டாக பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்
இதுதவிர அவரது தந்தை ஹரிவன்ஷ்ராய் பச்சன் பெயரிலும் ஒரு பங்களா வைத்துள்ளார் அமிதாப். இந்த பங்களாவில் தனது பெற்றோருடன் வசித்து வந்த அவர், அவர்களின் மறைவுக்குப் பின்னர் அங்கிருந்து ஜூஹூவில் உள்ள ஜல்சா பங்களாவுக்கு மாறிவிட்டார். இந்த பங்களாவின் விலை ரூ.160 கோடியாம்.
அமிதாப் பச்சனுக்கு சொந்தமான மூன்றாவது பங்களா பெயர் ஜனக், இங்கு தான் அவருடைய அலுவலகம் உள்ளது. அவர் இங்கு செய்தியாளர்களையும், விருந்தினர்களையும் சந்திக்கிறார். இது தவிர, அவருக்கு சொந்தமான மற்றொரு பங்களாவும் உள்ளது, அதை அவர் பன்னாட்டு வங்கி ஒன்றுக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு தான் வசித்து வரும் ஜல்சா பங்களாவுக்குப் பின்னால், 60 கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களா ஒன்றை தனது பேத்தி ஆராத்யாவுக்காக வாங்கினார் அமிதாப். இதுதவிர, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம், அமிதாப் பச்சன் 31 கோடி ரூபாய் மதிப்புள்ள டூப்ளெக்ஸ் வீட்டை வாங்கினார். இந்த வீட்டில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் வாடகைக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வீட்டின் வாடகையாக ஒவ்வொரு மாதமும் 10 லட்சம் ரூபாய் செலுத்துகிறாராம் கீர்த்தி.
இதையும் படியுங்கள்... அப்போதே கணித்த பயில்வான் ரங்கநாதன்..விமர்சனங்களுக்கு உள்ளாகும் நயன்தாரா விவகாரம்
அதேபோல் கடந்த மாதம் அமிதாப் பச்சன் 2 ஆயிரம் சதுர அடியில் ஒரு வீட்டை வாங்கினார். இந்த வீட்டின் விலை ரூ.14.5 கோடியாம். பங்களாக்கள் தவிர, கார்களை வாங்கி குவிப்பதிலும் அதிக ஆர்வம் உள்ளவராக இருந்து வந்துள்ளார் அமிதாப் பச்சம். தற்போதைய நிலவரப்படி அவரிடம் சுமார் 11 சொகுசு கார்கள் உள்ளன.
அதன்படி மினி கூப்பர், லெக்சஸ், ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம், பி.எம்.டபிள்யூ, பென்ஸ், ரேஞ்ச் ரோவர், டோயோட்டா லேண்ட் குரூஸர், பெண்ட்லி, லெக்சஸ் LX470, பி.எம்.டபிள்யூ X5, பி.எம்.டபிள்யூ 7 Series மற்றும் மெர்சிடீஸ் S320 போன்ற கார்கள் உள்ளன. இந்த வாகனங்களின் மதிப்பு மட்டும் சுமார் 12 முதல் 14 கோடி இருக்குமாம்.