Valimai Review : தட்டித்தூக்கினாரா அஜித்?... வலிமை worth-ஆ... இல்லையா? - முழு விமர்சனம் இதோ

First Published Feb 24, 2022, 8:43 AM IST

எச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, புகழ், யோகிபாபு நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் வலிமை படத்தின் விமர்சனம்.

அர்ஜுனன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அஜித், மதுரையில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். மறுபுறம் பைக் ரேஸரான கார்த்திகேயா, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார். அவர் தலைமையில் ஒரு கும்பலே இந்த வேலையை செய்து வருகிறது. அவர்களை பிடிக்க அஜித்தை களமிறக்குகிறது காவல்துறை.

ஒரு கட்டத்தில் அஜித்தின் தம்பியான ராஜு ஐயப்பா கார்த்திகேயாவின் போதைப்பொருள் கும்பலுடன் சேர்ந்து சில சட்டவிரோத செயல்களை செய்கிறார். அந்த கும்பலிடம் இருந்து நடிகர் அஜித் தனது தம்பியை எப்படி மீட்கிறார்? அதற்காக அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன? வில்லன் கும்பலை அழித்தாரா? என்பது படத்தின் மீதிக்கதை.

நடிகர் அஜித், மொத்த படத்தையும் தனி ஆளாக தோளில் சுமந்து இருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகள் வேறலெவல், புகுந்து விளையாடி இருக்கிறார் என்றே சொல்லலாம். முதல் பாதி முழுவதும் ஆக்‌ஷனின் மிரள வைத்தவர், இரண்டாம் பாதியில் செண்டிமெண்ட் காட்சிகளில் உருக வைக்கிறார். 

வில்லன் கார்த்திகேயா, தமிழில் இவருக்கு இது முதல் படமாக இருந்தாலும், மாஸ் வில்லனாக வந்து அஜித்துக்கு செம்ம டஃப் கொடுத்துள்ளார். சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் இருக்கும் இவரது மிடுக்கான தோற்றம் வில்லன் கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்த்துள்ளது. இனி தமிழ் படங்களில் இவருக்கு செம்ம டிமாண்ட் உருவானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

நடிகை ஹூமா குரேஷியின் கதாபாத்திரம் திறம்பட வடிவமைக்கபட்டு இருக்கிறது. படம் முழுக்க அஜித்துக்கு பக்க பலமாக இருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் பின்னி பெடலெடுத்து இருக்கிறார் என்றே சொல்லலாம். புகழ், சுமித்ரா, ஜி.எம்.சுந்தர், பாவல் நவ்கீதன் ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

ஆக்‌ஷன் திரில்லர் படம் எடுப்பதில் தான் ஒரு கில்லாடி என ஏற்கனவே தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் செய்துகாட்டிய வினோத், தற்போது வலிமையில் அதனை மீண்டும் நிரூபித்துள்ளார். வசனங்கள் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கின்றன. ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என இரண்டையும் கலந்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக கொடுத்துள்ளார் வினோத். முதல் பாதி விறுவிறுப்பாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் சில காட்சிகளின் நீளத்தை குறைத்து இருக்கலாம், மற்றபடி எந்தவித பிசிரும் இல்லாமல் தட்டி தூக்கி இருக்கிறார் இயக்குனர்.

யுவனின் இசை, திலீப் சுப்பராயனின் ஸ்டண்ட் காட்சிகள், நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. ஸ்டண்ட் காட்சிகள் ஒவ்வொன்றையும் பார்க்கும் போது ஹாலிவுட் படம் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அந்த அளவுக்கு மெர்சல் காட்டியுள்ளார் திலீப் சுப்பராயன்.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறார் என்றே சொல்லலாம். நாங்க வேற மாறி பாடலில் அஜித்தின் நடனமும் சிறப்பாக அமைந்திருந்தது. யுவனின் விசில் தீம் சண்டைக் காட்சிக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. ஆகமொத்தம் வலிமை பற்றி ஒற்றை வரியில் சொல்லவேண்டுமானால் ‘ஆக்‌ஷன் விருந்து’.

click me!