சினிமாவில் ஜோடியாக நடிக்கும் நடிகர், நடிகைகள் இடையே நிஜ வாழ்க்கையில் காதல் ஏற்பட்டு அவர்கள் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு ஏராளமாக நடந்துள்ளது. அந்த பட்டியலில் தற்போது புதிதாக இணைய உள்ள ஜோடி தான் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன். இவர்கள் இருவரும் தேவராட்டம் படத்தின் ஜோடியாக நடித்திருந்தனர்.
அப்பட ஷூட்டிங்கின் போது மஞ்சிமா மீது காதல் ஏற்பட்டு முதலில் மனம்திறந்து காதலை சொல்லி உள்ளார் கவுதம் கார்த்திக். இரு நாட்களுக்கு பின்னர் தான் கவுதமின் காதலை ஏற்றுக்கொண்டாராம் மஞ்சிமா. சுமார் 3 ஆண்டுகள் காதலித்து வந்த இந்த ஜோடிக்கு இன்று திருமணம் ஆகி உள்ளது. இந்த நிலையில், இதற்கு முன்னர் கோலிவுட்டில் இதேபோல் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடி ஆன பிரபலங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அஜித் - ஷாலினி
கோலிவுட் காதல் ஜோடிகள் என்றால் நம்மில் பலருக்கும் முதலில் நினைவில் வருவது அஜித் - ஷாலினி ஜோடி தான். அமர்களம் படத்தில் நடித்தபோது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த ஜோடிக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளார்.
சூர்யா - ஜோதிகா
மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட கோலிவுட் ஜோடிகளுள் சூர்யா - ஜோதிகாவும் அடங்குவர். சூர்யாவுக்கு ஜோடியாக 7 படங்களில் நடித்துள்ளார் ஜோதிகா. கவுதம் மேனன் இயக்கிய காக்க காக்க படத்தில் நடித்தபோது இவர்கள் இடையே காதல் மலர்ந்தது. இந்த ஜோடி கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டது. இவர்களுக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளார்.
சினேகா - பிரசன்னா
கோலிவுட் ரசிகர்களால் புன்னகை அரசி என்று அழைக்கப்படுபவர் சினேகா. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்துகொண்டார். அச்சமுண்டு அச்சமுண்டு என்கிற படத்தில் நடித்தபோது சினேகா - பிரசன்னா இடையே காதல் மலர்ந்தது. இந்த ஜோடிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.