
நடிகை பார்வதி வேணுகோபால் நாயர், கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் என்றாலும், இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் அபுதாபியில் தான். இவருடைய தந்தை துபாயில் சேர்ந்த தொழிலதிபர் ஆவார். பார்வதியின் தாய் கல்லூரி பேராசிரியை. பார்வதியின் இளைய சகோதரர் ஷங்கர், ஐபிஎல் அணியின் 'கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மிக முக்கிய பொறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
தன்னுடைய பள்ளி படிப்பை அபுதாபியில் முடித்த பார்வதி நாயர், 15 வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்தார். இதை தொடர்ந்து மணிப்பால் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் தன்னுடைய கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்பை தொடர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போது தீவிரமாக மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். கர்நாடகாவின் 'மைசூர் சாண்டல் சோப்பின்' அம்பாசிடராக இருந்த இவர், நேவி குயின் என்கிற அழகி போட்டியில் டைட்டில் வென்றார்.
அதே போல், மிஸ் கர்நாடகா என்கிற அழகி போட்டியிலும் கலந்து கொண்டு, முதல் பரிசை வென்றார். ஃபெமினா மிஸ் இந்தியா பேஜெட்டாக கலந்து கொண்டு ஸ்டேட் லெவலில் தேர்வானார். மாடலிங் துறையை தொடர்ந்து, நடிப்பில் கவனம் செலுத்த துவங்கிய பார்வதி நாயர்... 2012 ஆம் ஆண்டு Poppins என்கிற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல மலையாள படங்களில் நடித்தார். மலையாளத்தை தொடர்ந்து கன்னடம், தமிழ் போன்ற மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டினார். அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு ரவி மோகன் நடிப்பில் வெளியான 'நிமிர்ந்து நில்' படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து, 2015-ஆம் ஆண்டு... தல அஜித் நடிப்பில் 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு ஜோடியாக, மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதுக்கும் இவரின் பெயர் நாமினேட் செய்யப்பட்டது. மேலும் தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி போன்ற பல படங்களில் நடித்தார். கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான' தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படத்திலும் ஜூனியர் சாட்ஸ் ஆபிஸர் ரோலில் நடித்திருந்தார்.
'ஜன நாயகன்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போது? தீயாக பரவும் தகவல்!
தற்போது 'ஆலம்பனா' என்கிற திரைப்படம் இவருடைய நடிப்பில் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. அதே சமயம் சில சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத பிரபலமாக பார்க்கப்பட்டு வரும் பார்வதி நாயருக்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. தற்போது இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில் இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
அதன்படி, பார்வதி நாயர் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் இப்போது நடந்து முடிந்துள்ள நிலையில், இதுபற்றிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் இவர்களின் திருமண தேதி குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.