தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக வலம் வந்தவர் வைரமுத்து. இவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். பாடகி சின்மயி, வைரமுத்து மீது மீடூ புகார் அளித்த பின்னர் பல்வேறு நடிகைகளும் சினிமாவில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து மனம்விட்டு பேசினர். இதனால் மீடூ இயக்கம் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது.
வைரமுத்து மீது புகார் தெரிவித்ததை அடுத்து, பாடகி சின்மயிக்கு சினிமாவில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன. தனக்கு கடந்த 5 ஆண்டுகளாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என சின்மயி பல்வேறு பேட்டிகளில் கூறியுள்ளார். அதற்கு காரணம் வைரமுத்து தான் என்றும் சின்மயி குற்றச்சாட்டை முன்வைத்த வண்ணம் உள்ளார். அதுமட்டுமின்றி பெண்களுக்கு எதிராக நடக்கு அநீதிகளுக்கு சமூக வலைதளங்களில் சின்மயி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
வைரமுத்து மீது சின்மயி மட்டுமின்றி 17 பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தும் அவர்மீது எந்தவித ஆக்ஷனும் எடுக்கப்படாதது ஆதங்கமாக இருப்பதாக குறிப்பிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார் சின்மயி. வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த கடிதத்தில் சின்மயி குறிப்பிட்டு இருந்தார். இப்படி சின்மயி தொடர்ந்து நீதிக்காக போராடி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு பாடகி வைரமுத்து மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருக்கிறார்.
சமீபத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு தமிழக அரசு சார்பில் கனவு இல்லம் கட்டித்தரப்படும் என்கிற அறிவிப்பு வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், தற்போது இந்த அறிவிப்பை பார்த்து ஷாக் ஆன பின்னணி பாடகி புவனா சேஷன் என்பவர், அரசின் இந்த அறிவிப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை அளித்தது குறித்தும் முதன்முறையாக மனம்திறந்து பேசி உள்ளார்.
அதன்படி அவர் கூறியதாவது : “தான் சினிமாவில் அறிமுகமான புதிதில், வைரமுத்துவை சந்தித்தபோது, அவர் என்னிடம் திரையுலகில் தனக்கு நிறைய செல்வாக்கு இருப்பதாக கூறினார். அதுமட்டுமின்றி தன்னுடன் இணக்கமாக நடந்துகொண்டால், உன்னை சினிமாவில் பெரிய இடத்துக்கு கொண்டு செல்கிறேன் என சொன்னார். ஆனால் நான் அதற்கெல்லாம் உடன்பட மறுத்துவிட்டேன்.
இதையும் படியுங்கள்... வெளிநாட்டு பப்பில் ‘ஊ சொல்றியா’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சமந்தா... வைரலாகும் வீடியோ
1998-ல் தனக்கு இந்த கொடுமை நடந்ததாகவும், அந்த சமயத்தில் சோசியல் மீடியா எதுவும் இல்லாததால், இதைப்பற்றி பேச முடியவில்லை. அவரை எதிர்த்ததால் சினிமாவில் மிகப்பெரிய பாடகி ஆகவேண்டும் என்கிற தனது கனவு உருக்குலைந்து போனதாக வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த காலகட்டத்தில் செல்போன் வசதியும் இல்லாததால், தன்னிடம் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் புவனா கூறியிருக்கிறார்.
மற்றொரு பேட்டியில், இதுவரை 17 பெண்கள் வைரமுத்துவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், அதில் 4 பேர் மட்டுமே தங்களது முகத்தையும், பெயரையும் வெளிப்படையாக கூறி உள்ளனர். நான் தற்போது எனக்கு நடந்த கொடுமையை பற்றி பேசியதற்கு முக்கியமான காரணம், இனி வரும் இளம் பாடகிகளின் கனவு இதுபோன்ற நபர்களால் உடைந்துவிடக் கூடாது என்பதற்காக தான்.
சின்மயி உடைய தைரியம் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. வைரமுத்து மீது புகார் தெரிவித்ததால் அவரை பலரும் சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் சின்மயி போன்ற தைரியமாகவும், துணிச்சல் உடனும் அதனை வெளியில் சொல்ல வேண்டும்” என புவனா சேசன் கூறி இருக்கிறார். சின்மயியை தொடர்ந்து புவனா சேஷனும் வைரமுத்து மீது புகார் தெரிவித்துள்ளதால் தற்போது இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்... மருதநாயகம் முதல் யோஹன் வரை... ஆஹா ஓஹோனு பில்-டப் கொடுத்து தொடங்கி பாதியிலேயே கைவிடப்பட்ட படங்களின் லிஸ்ட் இதோ