அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான பிரேமம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இப்படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பேமஸ் ஆனதால் அவருக்கு அடுத்தடுத்து பல்வேறு மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் இவர் நடித்த மாரி 2, என்.ஜி.கே., தியா ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதையடுத்து தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்த சாய் பல்லவிக்கு அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக அமைந்ததால், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்து விட்டார். இதனால் பிறமொழி படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் சாய் பல்லவி.
தற்போது இவர் கைவசம் விராட பருவம் திரைப்படம் மட்டுமே உள்ளது. புதிதாக பட வாய்ப்புகள் வந்தாலும் அவர் ஏற்காமல் இருந்து வந்தார் சாய் பல்லவி. இதன் காரணமாக அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், அதனால் தான் அவர் புதிய பட வாய்ப்புகளை தவிர்த்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
இந்நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் சாய் பல்லவி. அவர் கூறியதாவது : “திருமணம் குறித்து பரவும் தகவல் உண்மையில்லை. நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருப்பதனால் அதிக படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. சாய் பல்லவி நடித்தால் நல்ல படமாகத் தான் இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர். அதனால் தான் கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறேன்” என அவர் கூறியுள்ளார். இதன்மூலம் திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சாய் பல்லவி.
இதையும் படியுங்கள்... Vaadivaasal:வாடிவாசலுக்கு வந்த புது சிக்கல்! வெற்றிமாறனை வெயிட் பண்ண சொல்லிட்டு புது கூட்டணியில் இணைந்த சூர்யா