பாலிவுட் டூ கோலிவுட் வரை அனைத்து மொழிகளிலும் தற்போது படப்பிடிப்பு பணிகள் தொடங்கி இயல்பாக நடைபெற்று வருகின்றன. கொரோனா காலக்கட்டத்தில் என்ன தான் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பார்த்து, பார்த்து ஷூட்டிங் நடத்தப்பட்டாலும் நடிகர், நடிகைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவது தொடர்கதையாக மாறி வருகிறது.
சமீபத்தில் கேரள நடிகர் பிருத்விராஜ், நடிகை தமன்னா, சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது சிகிச்சைக்கு பிறகு பூரண உடல் நலம் பெற்றனர்.
தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியில் பரபரப்பை கிளப்பிய போதைப்பொருள் வழக்கில் ரகுல் ப்ரீத் சிங்கின் பெயரும் அடிபட்டது. இதையடுத்து மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த சர்ச்சைகளுக்குப் பிறகு லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் தனது குடும்பத்துடன் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றார்.
அங்கு பிகினி உடையில் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களின் நெஞ்சம் கவர்ந்தார். அதேபோல் அப்பா, அம்மா, சகோதரனுடன் ஜாலியாக விடுமுறையை என்ஜாய் செய்யும் புகைப்படங்களையும் பகிர்ந்து வந்தார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரகுல் ப்ரீத் சிங் பகிர்ந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில், எனக்கு கொரோனா பாசிட்டிவ். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். நான் உடல் நலத்துடன் இருக்கிறேன். சிறிது ஓய்விற்கு பிறகு விரைவில் ஷூட்டிங்கில் பங்கேற்பேன். என்னை சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி மற்றும் பாதுகாப்புடன் இருங்கள் என பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் ரகுல் ப்ரீத் சிங் நல்ல உடல் நலத்துடன் திரும்ப வேண்டுமென வாழ்த்து கூறி வருகின்றனர்.