மிஷ்கின் இயக்கிய "முகமூடி" படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.. இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், அவருக்கு தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
"ஓக லைலா கோசம்" என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான பூஜா ஹெக்டே, தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்தார். மேலும் ஹ்ரித்திக் ரோஷனின் "மொஹென்ஜோ தாரோ" திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். துரதிர்ஷ்டவசமாக, இப்படம் தோல்வியடைந்ததால், அவரின் பாலிவுட் ஆசைகள் தகர்ந்தது..
இருப்பினும், பூஜா ஹெக்டே தென்னிந்திய சினிமாவில் அல்லு அர்ஜுனின் "டிஜே" மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். தன்னை ஒரு முன்னணி நடிகையாக நிலைநிறுத்தி, பல நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். தமிழிலும் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்தார். மேலும் "ஹவுஸ்ஃபுல் 4" மூலம் பாலிவுட்டிலும் தடம் பதித்தார்.
இந்த நிலையில் மும்பையை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை பூஜா ஹெக்டே திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பூஜா இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்போ, விளக்கமோ எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும் சமூக வலைதளங்களில் பூஜா ஹெக்டே திருமணம் குறித்த தகவல் வேகமாக பரவி வருகிறது.
முன்னதாக பூஜா ஹெக்டே கர்நாடகாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரை காதலிப்பதாக தகவல் வெளியானது., பின்னர் சமீபத்தில் அவர் சல்மான் கானுடன் கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் நடித்தபோது, சல்மானுடன் டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவின. பூஜாவின் சகோதரர் திருமணத்தில் சல்மான் கலந்து கொண்டதால் இந்த வதந்தி வேகமாக பரவியது. ஆனால் இந்த தகவலை பூஜா மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.