சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது என்பது புதிதல்ல. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார் என சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்று சாதித்த பிரபலங்கள் ஏராளம். அந்த வகையில் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வருவாரா என்பது ரசிகர்கள் மனதிலும், மக்கள் மனதிலும் நீண்ட காலமாக உள்ள ஒரு கேள்வி தான்.
விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என மக்கள் ஆசைப்படுவதற்கு காரணம், அவர் கடந்த சில ஆண்டுகளாக பட விழாக்களில் பேசும் அரசியல் பேச்சு தான். குறிப்பாக பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக-வை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார் விஜய்.
இதையடுத்து சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் போட்டியிட்டு வெற்றிவாகை சூடினர். அவர்களையெல்லாம் அழைத்து நடிகர் விஜய் பாராட்டிய சம்பவங்களும் அரங்கேறின. இதையெல்லாம் பார்க்கும் போது நடிகர் விஜய் படிப்படியாக தனது அரசியல் நகர்வுகளை செய்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், சமீபத்திய நேர்காணலில் நடிகர் விஜய்யிடம், தளபதி எப்போது தலைவன் ஆகப்போகிறார் என நெல்சன் கேட்டார். இதற்கு பதிலளித்த விஜய், நான் இளைய தளபதியாக இருந்து தளபதி ஆனதை ரசிகர்கள் தான் முடிவு செய்தார்கள். அதேபோல் தான் நான் தலைவன் ஆக வேண்டுமா என்பதையும் அவர்களே முடிவு செய்ய வேண்டும். அதற்கான சூழ்நிலையும் வரணும். ஆனால் எனக்கு விஜய்யாக இருப்பது தான் பிடிக்கும்” எனக் கூறினார்.