வீட்டிலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ள விழா அரங்கத்துக்கு வந்துகொண்டிருந்தபோது அவரது காரை ரசிகர்கள் சூழந்துகொண்டனர். ரசிகர்கள் அன்பில் மிதந்து வந்த விஜய் ஒரு வழியாக விழா அரங்கத்துக்கு வந்து சேர்ந்தார்.
நடிகர் விஜய் தன்னுடைய விருது நிகழ்ச்சிக்கான லோகோவில் வள்ளுவரை பொன் நிறத்தில் வடிவமைத்து புது வித சேதியை மக்களுக்கு சொல்ல வருகிறார் என்றுதான் கூற வேண்டும். திருவள்ளுவர் பொன்னானவர். அவருக்கு காவியும் இல்லை, வெள்ளையும் இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
பிளஸ் டூ தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற மாணவி நந்தினிக்கு சான்றிதழுடன் வைர நெக்லஸ் பரிசளித்தார். நந்தினி அவரது குடும்பத்துடன் வந்து விஜய்யிடம் இருந்து பரிசை பெற்றுக்கொண்டார்.
விஜய் அருகில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் விஜய்க்கு ஒரு ஓவியத்தை பரிசாக வழங்கினார். அதனை பார்த்த விஜய் நெகிழ்ச்சியில் கண்கலங்கினார்.
இந்த விருது விழாவுக்கு வந்த செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சுஜனா என்ற மாணவி 12ம் வகுப்பு தேர்வில் 592 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் தீவிர விஜய் ரசிகை. அதனால் இந்த மாணவி விஜய்க்கு பரிசளிப்பதற்காக அவர் கையால் வரைந்த ஓவியத்தை கொண்டு வந்திருந்தார். விஜயிடம் பரிசு வாங்கிய பிறகு, தான் கொண்டு வந்திருந்த ஓவியத்தை கொடுத்தார் சுஜனா.
விருது விழாவில் பேசிய நடிகர் விஜய், “என் நெஞ்சில் குடியிருக்கும் இந்த பொதுத்தேர்வில் சாதனை படைத்த என் நண்பா, நண்பிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது வணக்கம். நான் நிறைய இதுபோன்ற ஆடியோ நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகளில் எல்லாம் பேசியுள்ளேன். இதுபோன்ற கல்வி நிகழ்ச்சியில் பேசியது இது தான் முதல் முறை” என்று கூறினார்.
ஒரு முழுமையான கல்வி என்பது நம்முடைய பள்ளி, கல்லூரி பாடங்களை கடந்து, எது நமது மூளையில் எஞ்சி இருக்கிறதோ அதுதான் முழுமையான கல்வி" என்கிற ஐன்ஸ்டீனின் பிரபலமான பழமொழியை மேற்கோள் காட்டி பேசினார் விஜய்.
சமீபத்தில் ஒரு படத்தின் வசனம் என்னை மிகவும் பாதித்தது. காடு வச்சிருந்தா எடுத்துக்குவானுக, காசு வச்சிருந்தா புடுங்கிக்குவானுக, ஆனால் படிப்ப மட்டும் யாரும் எடுக்க முடியாது.. என்று வசனம் வரும். கல்விக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக என் மனதில் இருந்து வந்தது. அது இன்று நிறைவேறி இருக்கிறது.
பணம் கொடுப்பவர்கள் தோல்வியடைந்தால், அது நீங்கள் கொடுக்கும் பரிசு. பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்கள் என்று மாணவ, மாணவிகள் பெற்றோரிடம் கூற வேண்டும். பாடப்புத்தகங்களை தாண்டி மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். பாடப்புத்தகங்களை தாண்டி மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி மாணவ, மாணவிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்” என்று பேசினார் நடிகர் விஜய்.