இணையத்தில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியிடுவது தன் மனதிற்கு மிகுந்த வேதனையை தருவதாகவும், மக்கள் இதனை வரவேற்காமல் தியேட்டரில் சென்று படம் பார்க்க வேண்டும் என்றும் சூரி மக்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் சூரி நடிப்பில், பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையடுத்து சூரி திரையரங்குகளுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் திண்டுக்கல்லில் தனியார் திரையரங்கிற்கு சென்ற சூரி ‘மாமன்’ திரைப்படம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
26
வசூலை குவிக்கும் 'மாமன்' திரைப்படம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “‘மாமன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. அனைத்து திரையரங்குகளிலும் வசூலை குவித்து வருகிறது. படத்திற்கு யாருமே மாறுபட்ட கருத்துக்கள் கூறவில்லை. இதே போல் ஒவ்வொரு வருடமும் குடும்பம் சார்ந்த திரைப்படங்களை எடுக்க ஆசைப்படுகிறேன். படத்தை வெற்றிப்படமாக மாற்றிய தாய்மார்களுக்கு மிக்க நன்றி. இந்தப் படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
36
நகைச்சுவை நடிகராக நடிக்க வேண்டுமா? மக்களே கூறட்டும்
மேலும் பேசிய அவர், “இந்தப் படத்தில் நடந்தது போலவே தங்கள் குடும்பத்திலும் நடந்திருப்பதாக, படத்தைப் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். சினிமா என்றில்லாமல் அனைவரின் வாழ்க்கையையும் இணைக்க கூடிய படமாக இது இருக்கிறது. கதாநாயகனாக தொடர்ந்து வெற்றிப்படங்கள் வருகிறது. இருந்தாலும் நகைச்சுவை நடிகராக நடிக்க வேண்டுமா? அல்லது கதாநாயகனாக நடிக்க வேண்டுமா? என்று மக்களே கூறட்டும். மக்கள் வரவேற்பு இல்லாமல் இங்கு எந்த ஒரு விஷயமும் நடக்காது. நகைச்சுவை என்பது எல்லோரிடமும் இருக்கும். கதாநாயகனாக நடித்தாலும் நகைச்சுவை இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்” எனக் கூறினார்.
நகைச்சுவையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்
பெரிய கதாநாயகர்களுடன் நகைச்சுவை நடிகராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தற்போது கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புக்கு எந்த இடையூறும் இல்லாமல் பெரிய நடிகருடன் நகைச்சுவையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். எனக்கு சரியாக இருக்கும் பட்சத்தில் நடிப்பேன்” என்றார். மேலும் புது படங்கள் திருட்டுத்தனமாக சமூக வலைதளங்களில் வெளியாகும் பொழுது அதற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.
56
சூரியின் மன வேதனை
கோடிக்கணக்கில் செலவு செய்து படத்தை எடுத்துவிட்டு இயக்குனர், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் படம் எப்படி வரப்போகிறது? படத்திற்கு மக்கள் வரவேற்பு கொடுப்பார்களா? என கடவுளை வேண்டிக் கொண்டிருக்கும் பொழுது தவறான முறையில் திருட்டுத்தனமாக படங்களை வெளியிடுவது மனதிற்கு மிகவும் வேதனை தருகிறது. அப்படி திருட்டுத்தனமாக சமூக வலைதளங்களில் படத்தை வெளியிடுவது, இன்னொருவர் குழந்தையை கொண்டு வந்து கொலை செய்வதற்கு சமம். இதை மக்கள் வரவேற்கக் கூடாது. பல வருடங்களாக அரசு இதனை ஒழிக்க முயற்சி செய்து வருகிறது.
66
தியேட்டருக்கு சென்று படம் பாருங்கள்
தியேட்டரில் சென்று படம் பார்ப்பது போன்ற அனுபவம் எங்கும் கிடைக்காது. சமூக வலைதளங்களில் படங்கள் வெளியானாலும் படம் நன்றாக இருந்தால் மீண்டும் தியேட்டரில் வந்து மக்கள் படம் பார்க்கின்றனர். தியேட்டருக்கான வரவேற்பு கொடுத்து தான் வருகின்றனர். FMS கொடுப்பதால் படம் வெளிநாடுகளுக்கு சென்று சேர்கிறது. நல்லது நடக்க வேண்டும் என்று நான்கு பேர் நினைத்தால் இரண்டு பேர் இதை தவறான முறையில் பயன்படுத்துவதாக என அவர் கூறினார்.