
அஜித் நடிப்பில், கடைசியாக 2023-ஆம் ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியான திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த படம், பல மாத காத்திருப்புக்கு பின்னர், கைவிடப்பட்ட நிலையில்... இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதியானது. இந்த தகவலை உறுதி செய்த லைகா நிறுவனம், அஜித்தின் 'விடாமுயற்சி' படம் குறித்து அதிகார பூர்வமாக அறிவித்தது.
அஜித் நடித்த படங்களிலேயே அதிக நாட்கள் வெளிநாட்டில் படமாக்கப்படும் திரைப்படம் 'விடாமுயற்சி' படம் தான் என கூறப்படுகிறது. அதே போல் அஜித் ஒவ்வொரு காட்சியும் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக, அதிக ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் கார் சேசிங் காட்சியில் அஜித் மற்றும் ஆரவ் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடித்தனர், என்பதை ரசிகர்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, ஆரவ், அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 80 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்ட போதும், இன்னும் சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அஜித் இந்த படத்தில் நடித்து முடிப்பதற்கு முன்பே... ஆதிக் ரவி சந்திரன் இயக்கம் 'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்க துவங்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பும் பரபரப்பாக நடந்து வருகிறது.
எதிர்நீச்சல் நாயகி மதுமிதாவுக்கு திருமணமா? சோகமான விஷயத்துடன்.. அவரே கூறிய ஹாப்பி நியூஸ்!
'விடாமுயற்சி' திரைப்படம், தீபாவளிக்கும்... 'குட் பேட் அக்லி' பொங்கலுக்கும் ரிலீஸ் ஆகலாம் என கூறப்பட்ட நிலையில், தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால், அதற்குள் படப்பிடிப்பை முடித்து, திரைப்படத்தை வெளியிடுவது சாத்தியம் இல்லை என்பதால், 'விடாமுயற்சி' படம் பொங்கல் ரிலீசாக தள்ளி போய் உள்ளது. அதே போல் பொங்கல் ரிலீஸ் என கூறப்பட்ட 'குட் பேட் அக்லி' திரைப்படம், அஜித்தின் பிறந்தநாளுக்கு தள்ளி போய் உள்ளது. மைதிலி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் குறித்து, இதுவரை வெளியான போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த படம் மீதான எதிர்பார்ப்பும், தல ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படும் நிலையில்... தற்போது இந்த படத்தில் இணைந்துள்ள தகவலை நடிகர் பிரசன்னா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அன்பான நண்பர்களே மற்றும் நலம் விரும்பிகளே, இந்த முறை அன்புக்குரிய தல அஜித்குமார் சாரின் படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது என்னுடைய கனவு. மங்காத்தா படத்தில் இருந்தே, ஒவ்வொரு முறையும் ஏ.கே. சாரின் படங்கள் அறிவிக்கப்படும்போது, அதில் நானும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளேன். அவரது ரசிகர்கள் தொடர்ந்து யூகித்து, அவர்கள் சொன்னது போல் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்கிறேன் என நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த வாய்ப்பை அமைத்து கொடுத்த கடவுளுக்கு நன்றி. ஏகே சார், ஆதிக், சுரேஷ் சந்திரா சார், மைத்ரி மூவிஸ் மற்றும் கடைசியாக தலவுடன் என்னை அவரது படத்தில் பார்க்க விரும்பிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் சிலிர்ப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். மன்னிக்கவும் இப்போது அதிகம் வெளிப்படுத்த முடியவில்லை. நான் எனது முதல் சில நாட்களை படமாக்கிவிட்டேன், என்னால் ஒன்று மட்டும் சொல்ல முடியும், அவர் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதற்காக அவர் மிகவும் நேசிக்கப்படுகிறார், அவரைப் பற்றி உங்களுக்கும் எனக்கும் தெரிந்ததுதான் அவர் மிகவும் பணிவான மனிதன் என கூறி உள்ளார். மேலும் இந்த படத்தில் பிரசன்னா அஜித்துக்கு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.