
உணவகங்களுக்கு சென்று உணவுகளை ருசி பார்த்து அதை வீடியோவாக யூடியூப்பில் வெளியிட்டு பிரபலமானவர் இர்பான். இதன்மூலம் பிரபலங்களை பேட்டி எடுப்பது, சினிமா புரமோஷன் நிகழ்வுகளை செய்வது என வேகமாக வளர்ந்து வருகிறார் இர்பான். இவருக்கு கடந்த ஜூலை 24-ந் தேதி தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும் அறையில் நடந்ததை வீடியோவாக பதிவு செய்து, தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார்.
அதில் குழந்தையின் தொப்புள் கொடியை அவரே வெட்டும் காட்சியும் இடம்பெற்று இருந்தது. இர்பானின் இந்த செயல் தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின் படி தவறு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் தான் இந்த அறுவை சிகிச்சையை செய்ய வேண்டும் என்றும், எந்தவித பயிற்சியும் இல்லாத இர்பான் தொப்புள் கொடியை வெட்டியதும், அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக ஊரக நலப்பணிகள் இயக்குனர் மருத்துவ கவுன்சிலில் புகார் அளித்துள்ளதோடு, இர்பானின் குழந்தை பிறந்த மருத்துவமனைக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதன் முதற்கட்டமாக அந்த மருத்துவமனைக்கு 10 நாட்கள் மருத்துவர் பார்க்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இர்பான் செய்தது மன்னிக்கக்கூடிய செயல் அல்ல தண்டிக்கக்கூடிய செயல் என்று அமைச்சர் மா.சுப்ரமணியனும் கூறி உள்ளதால் அவர்மீது ஆக்ஷன் எடுக்கப்படுவதும் உறுதியாகி உள்ளது.
இர்பான் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது இது முதன்முறை அல்ல, முன்னதாக இர்பான் தன் மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா; பெண்ணா என்பதை துபாயில் மருத்துவ பரிசோதனை செய்து கண்டறிந்துள்ளார். அந்த பரிசோதனை முடிவையும் தன்னுடைய யூடியூப் சேனலில் இர்பான் அறிவித்து இருந்தார். அந்த வீடியோவுக்கு மில்லியன் கணக்கிலான வியூஸும் கிடைத்தன.
இதையும் படியுங்கள்... தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம்; மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் - இர்பான் மீது பாயும் நடவடிக்கை
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து அறியவோ, தெரிவிக்கவோ இந்தியாவில் தடை உள்ள நிலையில், அதை அறியாமல் குழந்தையின் பாலினம் குறித்து வீடியோ வெளியிட்ட இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து வெளியில் சொல்பவர்கள் மீது தமிழகத்தில் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தை வழிவகை உள்ளது.
இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து இர்பான் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் இருந்து வீடியோவை நீக்கிவிட்டு சுகாதாரத்துறைக்கு விளக்கம் அளித்தார். இதையடுத்து அந்த பிரச்சனையில் இருந்து இர்பான் விடுபட்டார். இதுமட்டுமின்றி இர்பானின் கார் மோதிய விபத்தில் மூதாட்டி பலி ஆனது. ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியது என இர்பானை சுற்று அடிக்கடி சர்ச்சைகள் வட்டமடித்த வண்ணம் உள்ள நிலையில் தற்போது குழந்தையின் தொப்புள் கொடி வெட்டும் வீடியோவை வெளியிட்டு புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
யூடியூப்பில் காப்பிரைட் போன்றவற்றை ஆராய்ந்து வீடியோ வெளியிடும் இர்பான் போன்ற யூடியூப்பர்கள் இந்திய சட்டங்களையும், தமிழ்நாட்டு சட்டங்களையும் தெரிந்து வீடியோ பதிவிட வேண்டும் என சட்ட வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இர்பான் எவ்வளவு பெரிய சர்ச்சைகளில் சிக்கினாலும் அதில் இருந்து ஈஸியாக தப்பித்து விடுகிறார். அதற்கு அவருக்கு இருக்கும் அரசியல் பின்புலமும் காரணம் என்கிற விமர்சனமும் பரவலாக முன்வைக்கப்படுகிறது. துணை முதல்வர் உதயநிதிக்கு பிடித்த யூடியூபர்களில் இர்பானும் ஒருவர் என்பதால், அவர் உதவியுடன் இர்பான் தப்பித்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு இனியாவது எவ்வித சர்ச்சையிலும் சிக்காமல் இர்பான் பொறுப்புடன் நடந்துகொள்ல வேண்டும் என்பதே பலரும் அவருக்கு அளிக்கும் அட்வைஸாக உள்ளது.
இதையும் படியுங்கள்... சர்ச்சைக்கு மத்தியில் மகளுக்கு யூடியூபர் இர்ஃபான் சூட்டிய ஷார்ட் அண்ட் ஸ்வீட் பெயர் என்ன தெரியுமா?