
நடிகர் ஸ்ரீகாந்த் சினிமாவில் அறிமுகமாகும் முன்னரே சின்னத்திரையில் அறிமுகமாகிவிட்டார். ஜன்னல் மரபு கவிதைகள் என்கிற சீரியல் மூலம் தான் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீகாந்த். இந்த சீரியலை கே பாலச்சந்தர் இயக்கி இருந்தார். இதையடுத்து கடந்த 2002-ம் ஆண்டு சசி இயக்கத்தில் வெளிவந்த ரோஜாக் கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக காலடி எடுத்து வைத்தார் ஸ்ரீகாந்த். ரோஜாக் கூட்டம் படம் வெற்றியடைந்ததால் அவருக்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கோலிவுட்டில் கிடைத்தன.
பின்னர் மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு போன்ற திரைப்படங்களில் நடித்தார் ஸ்ரீகாந்த். இப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவற்றில் பார்த்திபன் கனவு திரைப்படத்திற்காக நடிகர் ஸ்ரீகாந்துக்கு தமிழக அரசு விருதும் கிடைத்தது. பின்னர் கதைத்தேர்வில் கோட்டைவிட்ட ஸ்ரீகாந்த், தொடர்ந்து பிளாப் படங்களில் நடித்து மார்க்கெட்டை இழந்தார்.
தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ஸ்ரீகாந்துக்கு அவருடைய முதல் பட இயக்குனரான சசி தான் கம்பேக் கொடுத்தார். அவர் இயக்கிய பூ படம் ஸ்ரீகாந்துக்கு திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் மீண்டும் பார்முக்கு வந்த ஸ்ரீகாந்துக்கு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை ஏற்று அவர் இயக்கத்தில் வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் தோழனாக நடித்து அசத்தினார். நண்பன் படத்திற்கு பின்னர் கடந்த 14 ஆண்டுகளாக ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த ஒரு படம் கூட ஹிட்டாகவில்லை.
இருப்பினும் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டே தான் இருந்தார் ஸ்ரீகாந்த். அப்படி தீங்கிரை என்கிற படத்தில் நடித்தபோது அவருக்கு ரூ.10 லட்சம் சம்பளமாக பேசப்பட்டிருந்தது. அப்படத்தை தயாரித்த பிரசாத் சம்பளத்தை தராமல், ஸ்ரீகாந்த் காசு கேட்கும்போதெல்லாம அவருக்கு கொக்கைன் என்கிற தடை செய்யப்பட்ட போதைப்பொருளை கொடுத்து வந்திருக்கிறார். இதனால் போதைக்கு அடிமையான ஸ்ரீகாந்த், தற்போது போலீசிடம் சிக்கி இருக்கிறார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதால் தற்போது கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஸ்ரீகாந்த்.
நடிகர் ஸ்ரீகாந்த் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டு இருக்கிறது. நடிகர் ஸ்ரீகாந்த் போதைக்கு அடிமையானது மட்டுமின்றி தன் வீட்டில் போதைப் பார்ட்டியும் நடத்தி இருக்கிறார். அதில் கலந்துகொண்டவர்கள் யார்... யார் என்பது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த போதைப்பொருள் வழக்கில் ஏராளமான திரைப்பிரபலங்கள் சிக்கவும் வாய்ப்பு உள்ளதாம். இதில் நடிகைகள் சிலரும் சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
போதைப் பொருள் வழக்கு ஒருபுறம் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் தவறவிட்ட பிளாக்பஸ்டர் பட வாய்ப்புகள் பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் ரோஜாக் கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், அதற்கு முன்னரே அவர் ஹீரோவாக நடிக்க இருந்த திரைப்படம் 12பி-யாம். சில காரணங்களால் அந்த பட வாய்ப்பு கைகூடாமல் போக, பின்னர் அதில் நடிகர் ஷியாம் நாயகனாக நடித்தார். ஷியாமுக்கு இது முதல் படமாகும்.
அதேபோல் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நாயகனாக நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான ரன் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் அணுகப்பட்டது நடிகர் ஸ்ரீகாந்தை தானாம். ஆனால் அவர் அப்படத்தில் நடிக்க மறுத்ததை அடுத்து மாதவன் நடித்து ரன் படம் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகிவிட்டது. இதுதவிர மணிரத்னம் இயக்கிய மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்றான ஆயுத எழுத்து திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் நழுவவிட்டிருக்கிறார் ஸ்ரீகாந்த்.
ஆயுத எழுத்து படத்தின் ஆடிஷனுக்கு சென்று, அதில் சித்தார்த் நடித்த கேரக்டரில் நடிக்க தேர்வாகி இருக்கிறார் ஸ்ரீகாந்த். ஷூட்டிங் தொடங்கும் முன்னர் மனசெல்லாம் படத்தின் போது ஒரு தீ விபத்தில் சிக்கிவிட்டாராம் ஸ்ரீகாந்த், அவர் குணமான பின்னர் ஆயுத எழுத்து படத்தில் நடிப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இதனால் மணிரத்னமும் அவருக்காக காத்திருந்தாராம். ஆனால் மனசெல்லாம் பட தயாரிப்பாளர் தன் படத்தில் நடிக்காமல் வேறு எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என முட்டுக்கட்டை போட்டதால் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து படத்தில் நடிக்க முடியாது என சொல்லி இருக்கிறார். அவருக்காக இத்தனை நாட்கள் காத்திருந்ததால் டென்ஷன் ஆன மணிரத்னம், இனி உன்னை என் படங்களுக்கு அழைக்கவே மாட்டேன் என காட்டமாக சொல்லிவிட்டாராம்.
இதுதவிர இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியாகி தேசிய விருது வென்ற நான் கடவுள் திரைப்படத்தில் நடிக்கவும் பர்ஸ்ட் சாய்ஸ் ஆக இருந்தது ஸ்ரீகாந்த் தானாம். அதேபோல் தன்னுடைய முதல் பட இயக்குனரான, சசி விஜய் ஆண்டனியை வைத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த பிச்சைக்காரன் படத்திலும் நடிக்க மறுத்துவிட்டாராம் ஸ்ரீகாந்த். அதேபோல் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் கதையும் நடிகர் ஸ்ரீகாந்துக்காக எழுதப்பட்டது தானாம். அதில் நடிக்கும் வாய்ப்பையும் மிஸ் பண்ணிவிட்டதாக ஸ்ரீகாந்த் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.