
காலம் ஒருவரை பூமியில் இருந்து எடுத்துச் சென்றாலும் நீங்கா புகழோடு அவரது பெயர் நிலைத்திருப்பது ஒரு சிலருக்கு மட்டுமே சாத்தியம். அப்படி காலம் கடந்து கொண்டாடப்படும் பல வெற்றிப்பாடல்களை எழுதி, மக்கள் மனதில் இன்றளவும் கவிதைகளின் அரசனாக கோலோச்சி இருப்பவர் கவியரசர் கண்ணதாசன். இவர் கடந்த 1927-ம் ஆண்டு ஜூன் 24-ந் தேதி சிவகங்கை மாவட்டம் சிறுகூடல் பட்டியில் பிறந்த கண்ணதாசனுக்கு உடன் பிறந்தவர்கள் 8 பேர், கண்ணதாசனின் தந்தை பெயர் சாத்தப்பன், தாய் பெயர் விசாலாட்சி.
8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் சிறுவயது முதலே எழுத்தின் மீது தனியாத ஆர்வம் கொண்டிருந்தார் கண்ணதாசன். பத்திரிகையில் கதை எழுத வேண்டும் என்கிற கனவோடு, யாரிடமும் சொல்லாமல் சென்னை வந்த கண்ணதாசனின் கனவு, பல போராட்டங்களுக்கு பின்னர் நனவானது. பின்னாளில் திரைப்படங்களுக்கு பாடல்களையும் எழுத தொடங்கினார் கண்ணதாசன். கன்னியின் காதலி என்கிற படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். அப்படத்தில் இடம்பெற்ற கலங்காதிரு மனமே என்கிற பாடலை அவர் எழுதி இருந்தார்.
அதன்பின்னர் திரையிசை பாடல்களின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார் கண்ணதாசன். அவரது பாடல்கள் இல்லாத படங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு அவரின் கவிதைகள் கோலோச்சியது.
திரையுலக ஜாம்பவான்களாக திகழும் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்றவர்களின் திரையுலக வளர்ச்சியில் கண்ணதாசனின் பாடல்களுக்கு பெரும் பங்கு உண்டு. மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற கண்ணே.. கலைமானே பாடல் தான் அவர் எழுதிய கடைசி பாடலாகும்.
4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ள கண்ணதாசனின் சொந்த வாழ்க்கை பற்றியும் அவரின் குடும்பம் பற்றியும் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில், கவிஞர் கண்ணதாசனுக்கு கடந்த 1950ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர் பொன்னழகி, பார்வதி என இருவரை ஒரே ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். இந்த இரண்டு மனைவிகள் மூலம் 14 குழந்தைகளுக்கு தந்தையானார் கண்ணதாசன்.
இதையும் படியுங்கள்... சாவித்ரியோட நிலை கனகாவுக்கு வரவே கூடாது! கண்ணீர் விடாத குறையாக குமுறிய பிரபலம்!
இதில் அவர் செய்த மூன்றாவது திருமணம் தான் சற்று சுவாரஸ்யமானது. ஒருமுறை கண்ணதாசன் எழுதிய கவிதையை படித்துவிட்டு கல்லூரி மாணவி ஒருவர் கடிதம் எழுதி இருக்கிறார். அவர் எழுதிய ஒரு கவிதையில் பெண்களை இழிவாக பேசி உள்ளதாகவும் அது மிகவும் தவறு என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாராம். அதில் அந்த பெண்ணின் பெயர் வள்ளியம்மை என்று இருப்பதை பார்த்த கண்ணதாசன், நீங்கள் செட்டியார் வீட்டுப் பெண் என நினைக்கிறேன் என பதில் கடிதம் போட்டுள்ளார்.
அதற்கு ரிப்ளை செய்த அந்தப் பெண், அதையெல்லாம் பேசாதீர்கள், இனி பெண்களை இழிவுபடுத்தி கவிதை எழுதுவதை நிறுத்துங்கள் என்று கூறி இருக்கிறார். அந்த பெண்ணின் தமிழ் புலமையை பார்த்து வியந்துபோன கண்ணதாசன் அவரை நேரில் சந்திக்க அவரது கல்லூரிக்கே சென்றிருக்கிறார்.
கல்லூரியில் வள்ளியம்மையை பார்த்ததும் நீ என் வாழ்க்கை துணையாக வந்தால் நன்றாக இருக்கும் என்று கண்ணதாசன் சொல்ல, அதற்கு வள்ளியம்மை நான் உங்க பொண்ணு மாதிரி என்று சொல்லி மறுத்திருக்கிறார். பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பின் வள்ளியம்மை மனதை மாற்றி அவரையே திருமணம் செய்திருக்கிறார் கண்ணதாசன். அப்போது வள்ளியம்மைக்கு 24 வயது, கண்ணதாசனுக்கோ 48 வயசு. 24 வருட வித்தியாசத்தில் திருமணம் செய்துகொண்ட கண்ணதாசன் - வள்ளியம்மை ஜோடிக்கு விசாலி என்கிற மகளும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... குரூப் டான்ஸர், ஹீரோயின், வில்லி என சினிமாவில் ஆல்ரவுண்டராக கலக்கியவர்... யார் இந்த சிஐடி சகுந்தலா?