
ஏ.எல்.எஸ்.புரெடக்ஷன் நிறுவனத்தைச் சேர்ந்தவரும், கவிஞர் கண்ணதாசனின் மருமகளுமான ஜெயந்தி கண்ணப்பன், பிரபலங்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு மிகவும் பரிச்சியமான ஒருவராகவே வலம் வருகிறார். அவ்வப்போது சில பேட்டிகளில் பிரபலங்கள் பற்றியும்... அவர்களின் கடந்த காலம் குறித்தும் பகிர்ந்து கொள்ளும் ஜெயந்தி கண்ணப்பன், சமீபத்தில் நடிகை கனகாவின் நிலை குறித்து ஆதங்கத்தோடு பேசியுள்ளார்.
இந்த பேட்டியில், நடிகை கனகா பற்றி அவர் கூறுகையில், கனகாவை சிறு வயதில் இருந்தே.. எனக்கு நன்கு தெரியும். "கனகா... வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது அவள் ஒரு புரோக்கன் ஃபேமிலியில் வளர்ந்தார். நினைவு தெரிந்த நாளில் இருந்தே, அப்பா - அம்மா இருவருமே அவர் கூட இருந்ததில்லை. அதனால் அவள் சந்தோஷமாக இருக்க வேண்டிய இளமைப் பருவத்தை தனியாகவே கழித்தார். ஒருவேளை கூடவே இன்னொரு குழந்தை... அண்ணனோ, தங்கையோ இருந்திருந்தால் அவள் சந்தோஷமாக இருந்திருப்பாள் என நினைக்கிறன்.
இதை தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆண்டு குட்டி பத்மினி கனகாவை சந்தித்ததாக கூறியபோது மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். உடனடியாக குட்டி பத்மினிக்கு போன் செய்து கனகா குறித்து விசாரித்தேன். குட்டி பத்மினி, கனகாவை சந்தித்த போது, ஒரு ஹோட்டலுக்கு போய் இருவரும் சாப்பிட்டோம் என கூறினார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது அப்போது நான் கனகாவை தனியா விட்டுவிடக்கூடாது என கூறினேன். காரணம்... சாவித்திரி அம்மா அன்னைக்கு யாருடைய ஆதரவு இல்லாமல் அவ்வளவு கஷ்டப்பட்டு இறந்தபோது நாங்க சின்னவங்களா இருந்ததால், எங்களால அப்போதைக்கு எதுவும் பண்ண முடியல, ஆனா அத பத்தி இப்போ நிறைய பேசுறோம். ஒரு வேலை இப்போ இருந்த சூழ்நிலை அன்று இருந்திருந்தால் அவங்கள கொண்டுவந்து வீட்டில் தங்க வச்சு நம்மளுடைய அம்மா மாதிரி பார்த்துட்டு இருந்திருப்போம். அதனால அவங்களுடைய ஒரு நிலை கனகாவுக்கு வந்து விடக்கூடாது என நினைக்கிறன் என தெரிவித்துள்ளார்.
மேலும் கனகாவின் அம்மா தேவிகாவின் திடீர் மரணம் தான், கனகாவை இந்த அளவுக்கு நிலைகுலைய வைத்தது. அவரின் மரணத்திற்கு நாங்க போயிருந்தோம். அப்போது அப்பா வழியில் சொந்தமும் அதிகமாக இல்லை. அம்மா வழி சொந்தம் தாய் மாமா உள்ளிட்ட சிலர் மட்டுமே இருந்தனர். அந்த பொண்ணு காரியங்களை செஞ்சு முடிச்சு, திரும்பி பின்னாடி பார்க்கும் போது யாருமே இல்ல. கடைசி காரியங்கள் கூட அந்த பெண் பிள்ளை தான் தேவிகாவுக்கு செய்தது. கடைசியாக அந்த வீட்டை விட்டு தேவிகாவை தூக்கிச் செல்லும்போது என்னை விட்டு போறியே அம்மா என கனகா அழுதார்.
பொதுவாக இளமைப் பருவம் சந்தோஷமாக இருந்ததால்தான் பிற்காலமும் அந்த பெண்ணுக்கு சந்தோசமாக இருந்திருக்கும். சிறுவயதில் இருந்தே தனிமையிலே இருந்ததால், அவர் யாரையும் நம்பாமல் தற்போது வரை ஒரு தனி தீர்வு போல வாழ்ந்து வருகிறார். 'ஒரு முறை நானும் நடிகை ராஜஸ்ரீயும் கனகாவை பார்ப்பதற்கு அவரின் வீட்டுக்கு சென்றோம். ஜன்னல் எல்லாம் மூடி இருந்தது. கதவை தட்டி தட்டி பார்த்தோம் திறக்கவில்லை. வீட்டு வாசலில் இருந்த போஸ்ட் பாக்சில், 'இது போல் நாங்கள் உன்னை பார்க்க வந்தோம். ஆனால் உன்னை பார்க்க முடியவில்லை, உனக்காக யாரும் இல்லை என நினைக்காதே நாங்கள் இருக்கிறோம் என எழுதி, அதில் எங்களுடைய அட்ரஸ் மற்றும் போன் நம்பரையும் எழுதி போட்டு விட்டு சென்றோம். ஆனால் கனகாவிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. அப்போது தான் பக்கத்தில் இருந்த வாட்ச்மேன் ஒருவர் எப்போதாவது தான் அவங்க வெளியில வருவாங்கன்னு சொன்னாரு.
கனகா குறித்து தன்னுடைய வருத்தத்தை இந்த பேட்டியில் பதிவு செய்துள்ள ஜெயந்தி கண்ணப்பன், ஏன் இந்த புள்ள தன்னைத்தானே தனிமை படுத்திக்கொள்கிறாள் என்ற வருத்தம் தன் மனதை விட்டு அகலவில்லை என கண்ணீர் விடாத குறையாக கூறியுள்ளார்.
நடிகை தேவிகாவின் ஒரே மகளான கனகா, 1990-களில் பல ஹிட் படங்களில் நடித்து லட்ச கணக்கில் சம்பாதித்தவர். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து பிரபலமான இவருக்கு சங்கீதமும் கை வந்த கலை தான். ஆரம்பத்தில் ஒரு பாடகியாக வேண்டும் என முயற்சி செய்த கனகா, பின்னர் நடிகையாக மாற்றியது இவரின் அழகு. பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த கனகா, கடந்த சில வருடங்களாக... எந்த ஒரு வெளியுலக தொடர்பும் இல்லாமல் தன்னை தானே தனிமை படுத்திகொண்டு வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.