
தென்னிந்திய திரையுலகில் சில ஆண்டுகளிலேயே தனக்கென்று ஒரு தனி இடத்தை உருவாக்கியவர் கிரித்தி ஷெட்டி. மாடலிங் உலகில் இருந்த அவருக்கு, திருப்புமுனையை ஏற்படுத்தி தந்த திரைப்படம் என்றால் அது, தெலுங்கு திரைப்படமான உப்பன்னா. அந்த படத்தில் அவர் நடித்த ‘பேபிலி’ கதாபாத்திரம், திரையங்குகளில் மட்டும் அல்லாமல் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தது. அதன் பின்னர் வந்த படங்கள் அவரது வெற்றியை நிலைநாட்டியதால், இன்று அவர் தென்னிந்தியாவின் மிக முக்கிய இளம் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார்.
தமிழ் திரையுலகிலும் கிரித்தி தொடர்ந்து நடித்து வருகிறார். கார்த்திக்கு ஜோடியாக 'வா வாத்தியார் ' படத்தில் அவர் இணைந்திருப்பது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல் ரவி மோகனுடன் ஜீனி மற்றும் பிரதீப் ரங்கநாதனுடன் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ஆகிய இரண்டு புதிய படங்களிலும் நடித்து முடித்துள்ளார். ஒரு பக்கம் கதாநாயகியாகப் பிஸியாக இருக்கும் அவருக்கு, இன்னொரு பக்கம் திரைப்படங்களை இயக்கும் ஆசையும் வளர்ந்து கொண்டிருப்பதாக அவரே கூறியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கிரித்தி தனது சினிமா பயணம் மற்றும் விருப்பங்களை மனம் திறந்து பேசியுள்ளார். “நான் படங்களைத் தேர்வு செய்வது ஒரு நடிகையாக மட்டுமில்லை. ஒரு சாதாரண சினிமா ரசிகையாக நினைத்துப் பார்த்துதான் நான் முடிவு செய்வேன். இந்த கதை மக்களிடம் பொருந்துமா, ஒரு புதிய கோணத்தை கொடுக்குமா என்று எனக்குள் நான் கேட்டு அதற்கான பதில் சரியாக வந்தால் மட்டும் தான் நான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன்,” என்று கூறினார்.
தன்னை மேலும் மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் தொடர்ந்து சில பயிற்சிகள் எடுத்து வருவதாகவும், கூறிய கிர்த்தி “நடனம் எனக்கு எப்போதுமே பிடித்தது. அதனால் கிளாசிக்கல் மற்றும் வெஸ்டர்ன் என இரு வகையிலும் பயிற்சி செய்து வருகிறேன். அதோடு, பாக்ஸிங், மார்ஷியல் ஆர்ட்ஸ் போன்ற ஆக்ஷன் பயிற்சிகளையும் எடுத்து வருகிறேன். எதிர்காலத்தில் ஆக்ஷன் கதைகளில் வலுவான கதாபாத்திரங்களை செய்யவேண்டும் என்ற ஆசை எனக்குள் உருவாகி வருகிறது,” என்று அவர் சொன்னார்.
கிரித்தி விரும்பும் இன்னொரு விஷயம் ‘ஹீரோயின் சென்ட்ரிக்’ கதைகள். “அதாவது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்படிப்பட்ட கதை வந்தால் நிச்சயமாக செய்ய விரும்புகிறேன்,” என்கிறார். மேலும் திரையுலகில் நடிக்க வருவதற்கு முன்பு திரைப்படம் எப்படி உருவாகிறது என்பது கூட எனக்கு தெரியாது. இன்று இயக்குநர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை கவனித்து கற்று வருகிறேன் .“சினிமா உலகத்தில் எந்த பின்னணியும் இல்லாமல் வந்த நான், இங்கே ஒரு படம் எப்படி உருவாகியாரது, அதற்காக போடப்படும் உழைப்பை பார்த்த பின்னர், இயக்குநர் மீது உள்ள பொறுப்பு எவ்வளவு பெரிது என்பது புரிந்தது. ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு உணர்வும் அவர்களால்தான் உயிர் பெற்று வருகிறது. அதனால் தான் டைரக்ஷன் மீது எனக்கு பெரும் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
“நான் முதல் படத்தில் பணிபுரிந்த புச்சி பாபு சார் முதல், தற்போது நடித்து வரும் படங்களின் இயக்குநர்கள் வரை அனைவரையும் ஒரு குருவாக நினைத்துப் பார்த்து அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது என் பழக்கம். அவர்களுடைய அமைதி, பார்வை, கதை சொல்லும் முறை, இதெல்லாம் எனக்கு பெரிய பாடம்,” என தெரிவித்துள்ள கிர்த்தி ஷெட்டி கூடிய விரைவில் படம் இயக்க தயாராகி வருகிறேன் என கூறியுள்ளார். ஒரு நடிகையாகா 22 வயதிலேயே வெற்றிபெற்றுள்ள உங்களுக்கு ஏன் இந்த விபரீத ஆசை என சில ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.