
2024 Disappointed Tamil Cinema in Box Office Collection : ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவில் 200க்கும் அதிகமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் அரணம் படத்தில் ஆரம்பித்து கும்பாரி, அயலான், கேப்டன் மில்லர், மிஷன்: சேப்டர் 1, சிங்கப்பூர் சலூன், லால் சலாம், லவ்வர், அரண்மனை 4, ரோமியோ, கருடன், மகாராஜா, இந்தியன் 2, ராயன், டிமாண்டி காலனி 2, தங்கலான், கொட்டுக்காளி, கோட், விடுதலை 2, அமரன், கங்குவா என்று கிட்டத்தட்ட 250 படங்களுக்கும் அதிகமான படங்கள் தமிழ் சினிமாவில் திரைக்கு வந்தன. கடைசியாக வாகை படம் திரைக்கு வந்தது.
Tamil cinema to lose Rs. 1000 crore in 2024 : இதில், கோட், அமரன், வேட்டையன், மகாராஜா, ராயன், அரண்மனை 4, டிமாண்டி காலனி 2, அயலான் என்று மாஸ் ஹீரோக்களின் படங்களை தமிழ் சினிமா கொண்டாடினாலும் 2024 ஆம் ஆண்டைப் பொறுத்த வரையில் தமிழ் சினிமாவிற்கு நஷ்டமான ஆண்டாக அமைந்திருக்கிறது. அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட பெரிய பட்ஜெட் படங்கள் போதுமான அளவில் எதிர்பார்த்த வெற்றியை குவிக்கவில்லை. உதாரணத்திற்கு கமல் ஹாசனின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா, ரஜினிகாந்தின் வேட்டையன் போன்ற மாஸ் ஹீரோக்களின் படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் குவிக்கவில்லை. 2024 ஆம் ஆண்டைப் பொறுத்த வரையில் தயாரிப்பாளர்கள் மொத்தமாக ரூ.3000 கோடி வரையில் செலவிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இதில், சிறிய பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள் வரையில் அனைவரும் அடங்குவர்.
கடைசியில் படங்களின் தோல்விகள் காரணமாக தயாரிப்பாளர்கள் கிட்டத்தட்ட ரூ.1000 கோடி வரையில் இழந்துள்ளனர். படங்களின் தோல்வி அவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 2024 ஆம் ஆண்டு வெளியான 250 படங்களின் டாப் 10 படங்களின் மொத்த வசூல் தோராயமாக ரூ.2000 கோடி. எஞ்சிய படங்களில் பெரும்பாலான படங்கள் தோல்வியை தழுவியுள்ளனர். இந்த டாப் 10 படங்களின் பட்டியலில் படங்களின் வசூல் அடிப்படையில் கோட், அமரன், வேட்டையன், மகாராஜா, இந்தியன் 2, ராயன், அரண்மனை 4, கங்குவா, டிமாண்டி காலனி 2, அயலான் ஆகிய படங்கள் இடம் பெற்றுளளன.
இதில், விஜய்யின் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) படம் அதிகபட்சமாக ரூ.456 கோடி வரையில் வசூல் குவித்திருக்கிறது. சிவகார்த்திகேயனின் அமரன் ரூ.335 கோடி, ரஜினிகாந்தின் வேட்டையன் ரூ.260 கோடி வரையில் வசூல் குவித்திருக்கின்றன. மற்றபடி தமிழ் சினிமா தோல்வி படங்களை அதிகளவில் சந்தித்து 2024 ஆம் ஆண்டில் நஷ்டத்தை எதிர்கொண்டிருக்கிறது. இதன் மூலமாக தயாரிப்பாளர்களுக்கு ரூ.1000 கோடி வரையில் (தோராயமாக) நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு ரூ.1000 கோடி நஷ்டத்தை கொடுக்க முக்கிய காரணங்களில் கமல் ஹாசனின் இந்தியன் 2 (ரூ.300 கோடி பட்ஜெட்), ரஜினிகாந்தின் வேட்டையன் (ரூ.300 கோடி பட்ஜெட்) மற்றும் சூர்யாவின் கங்குவா (ரூ.350 கோடி பட்ஜெட்) ஆகிய 3 படங்கள் அதிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த 3 படங்களின் பட்ஜெட் மொத்தமாக ரூ.1250 கோடி. இப்படி அதிக பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த 3 படங்களின் மொத்த வசூல் தோராயமாக ரூ.517 கோடி. இதன் மூலமாகவே தயாரிப்பாளர்களுக்கு ரூ.700 கோடி வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த நஷ்டம் குறித்து விநியோகஸ்தரும், தயாரிப்பாளரும், இயக்குநரும், BOFTA திரைப்பட நிறுவனத்தின் நிறுவனருமான ஜி தனஞ்செயன் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டில் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியான படங்கள் தான் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா. இந்தப் படங்களுக்கு அதிக பட்ஜெட். ஆனால், இதில் எந்தப் படமும் ரசிகர்களிடையே போதுமான அளவிற்கு ரீச் கொடுக்கவில்லை. குறிப்பாக இந்தியன் 2 மற்றும் கங்குவா படங்கள் அதிகளவில் எதிர்மறை விமர்சனங்களை பெற்றன.
இந்தப் படங்களுக்கு மாறாக விஜய்யின் கோட், சிவாகார்த்திகேயனின் அமரன் படங்களே அதிக வசூல் குவித்து தமிழ் சினிமாவை காப்பாற்றி கொடுத்தது. இதற்கு முன்னதாக 2023ல் வெளியான லியோ, பொன்னியின் செல்வன் 2, ஜெயிலர், வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றன. ஆதலால், தமிழ் சினிமாவிற்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை.
2023 ஆம் ஆண்டைப் போன்று 2024 ஆம் ஆண்டில் அமையவில்லை. 2024ல் அதிக வெற்றி படங்களும் இல்லை. இதில் கிட்டத்தட்ட 250 படங்களில் 10 படங்கள் தான் அதிக வசூல் குவித்தன. எஞ்சிய படங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடிந்தன. பொதுவாக சினிமா துறையில் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் படங்களில் கிட்டத்தட்ட 70 சதவிகித படங்கள் பெரும்பாலும் தோல்வி படங்களாகவே அமைகின்றன. ஆனால், அதிக எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வரும் மாஸ் ஹீரோக்களின் பெரிய பட்ஜெட் படங்கள் அதிகளவில் பாக்ஸ் ஆபிஸீல் வசூல் குவிக்கும் போது பெரியளவில் நஷ்ட லாப கணக்குகள் ஈடு செய்யப்படுகின்றன. மேலும் விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் நஷ்டமும் குறைக்கப்படுகிறது.
சிறிய பட்ஜெட் மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களில் வந்த படங்கள் கூட வெற்றி கண்டன. அதில், லப்பர் பந்து, கருடன், டிமாண்டி காலனி 2, வாழை போன்ற படங்கள் அதிக வசூல் குவித்து வெற்றி படங்களாக அமைந்தன. தமிழ் ரசிகர்கள் பெரிய பெரிய நட்சத்திரங்களை மட்டும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள், சிறந்த கதைகள், நடிப்பு ஆகியவற்றாலும் ஈர்க்கப்படுகிறார்கள். அதற்கு சிறந்த உதாரணமே லப்பர் பந்து, வாழை போன்ற படங்கள். இதில் எந்த ஆடம்பரமும் இல்லை. எளிமையான, யதார்த்தமான நடிப்பு, கதையும், காட்சியும் ரொம்பவே சிம்பிள்.
2024 ஆம் ஆண்டைப் போன்று தான் இப்போது வரையில் 2025ல் வெளியான படங்களும் அமைந்துவிட்டன. உதாரணத்திற்கு அதிக பட்ஜெட்டில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் திரைக்கு வந்த கேம் சேஞ்சர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதே போன்று தான் அஜித்குமாரின் நடிப்பில் வந்த விடாமுயற்சி படமும் கலவையான விமர்சங்களை எத்ர்கொண்டு கடைசியில் தோல்வி படமாக அமைந்துவிட்டது. ரூ.350 கோடி பட்ஜெட்டுல் எடுக்கப்பட்ட இந்தப் படம் தற்போது வரையில் ரூ.125 கோடி வரையில் வசூல் குவித்திருக்கிறது. ஆனால், சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மத கஜ ராஜா மற்றும் குடும்பஸ்தன் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தன. ரூ.15 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட மத கஜ ராஜா ரூ.56 கோடி வரையில் வசூல் குவித்திருக்கிறது. இதே போன்று ரொம்பவே கம்மியான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட குடும்பஸ்தன் ரூ.25 கோடி வரையில் வசூல் குவித்து வெற்றி படங்களாக அமைந்துவிட்டன.
2025 ஆம் ஆண்டில் ரஜினிகாந்தின் கூலி, அஜித் குமாரின் குட் பேட் அக்லி, கமல் ஹாசனின் தக் லைஃப், சூர்யாவின் ரெட்ரோ, சிவகார்த்திகேயனின் மதராஸி, பராசக்தி, விஜய்யின் ஜன நாயகன் என்று மாஸ் ஹீரோக்களின் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருக்கின்றன. அதிக எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வரும் இந்தப் படங்கள் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு 2024ல் அடைந்த நஷ்டம் மற்றும் தோல்வியிலிருந்து 2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவை மீட்டு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.