
இசைத்துறையில் பின்னணி பாடகராக விரும்புவர்களுக்கும், பின்னணி பாடகர்களாக இருப்பவர்களுக்கும் இளையராஜாவின் இசையில் ஒரு பாடலையாவது பாடி விட வேண்டும் என்கிற ஆவல் இருக்கும். தென்னிந்திய பாடகர்கள் துவங்கி இந்தியாவின் பிரபலமான பாடகர்கள் வரை இளையராஜாவின் இசையில் பாடுவதற்கு துடித்துக் கொண்டிருப்பர். எஸ்.பி.பி, சுசீலா, ஜானகி, ஜேசுதாஸ், மனோ, சித்ரா என பலரைப் பாட வைத்த இளையராஜா சில குரல்களை அரிதாகவே பயன்படுத்தியிருக்கிறார்.
‘கர்நாடக சங்கீத மேதை’ என்று அழைக்கப்படுபவர் பாலமுரளி கிருஷ்ணா. தேவராஜ் மோகன் இயக்கி, இளையராஜா இசையில் வெளிவந்த ‘கவிக்குயில்’ படத்தில் இவர் பாடிய “சின்ன கண்ணன் அழைக்கிறான்..” பாடல் காலத்தால் அழியாத வரம் பெற்றது. திரையிசை பாடல்கள் என்றாலே சிந்து பைரவி, கல்யாணி, மோகனம் போன்ற ராகங்களில்தான் இருக்கும் என்ற கருத்தை இளையராஜா இந்த பாடல் மூலம் பொய்யாக்கி இருந்தார். ‘ரீதி கௌளை’ என்ற ராகத்தில் இந்த பாடலை அமைத்து வெற்றிப் பாடலாக மாற்றி காட்டி இருந்தார் இளையராஜா.
எம்.எஸ்.வி இசையில் பல பாடல்களை பாடி புகழ் பெற்ற பி.பி ஸ்ரீநிவாஸ், இளையராஜா இசையில் ஒரே ஒரு பாடலை மட்டுமே பாடி இருக்கிறார். எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த ‘கடவுள் அமைத்த மேடை’ படத்தில் “தென்றலே நீ பேசு..” என்கிற பாடலை பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடியிருக்கிறார். பிபி ஸ்ரீனிவாஸின் வசீகரமான குரலும், தபேலாவும் இணைந்து இசைப்பதால் இப்பாடலை கேட்பவர்களின் மனது உருகிவிடும்.
‘நல்லவனுக்கு நல்லவன்’ என்கிற திரைப்படத்தில் வரும் “உன்னைத்தானே தஞ்சம் என்று..” பாடலை மஞ்சுளா குருராஜ் பாடி இருப்பார். இதை சுசீலா அல்லது ஜானகி பாடி இருப்பார் என நாம் கடந்து போய் இருப்போம். ஆனால் இந்தப் பாடலை கன்னட பின்னணி பாடகியான மஞ்சுளாவை வைத்து மிகக் கச்சிதமாக உருவாக்கி இருக்கிறார் இளையராஜா. தனித்துவமான குரல் வளம் கொண்ட மஞ்சுளாவிற்கு இந்தப் பாடலுக்கு பின்னர் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு தமிழில் எந்த பாடல்களும் அமையவில்லை.
மேற்கு வங்க மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் பண்டிட் அஜய் சக்ரபர்தி. இவர் ‘ஹேராம்’ படத்தில் வரும் “இசையில் தொடங்குதம்மா..” என்கிற பாடலைப் பாடியுள்ளார். ஹிந்துஸ்தானி கிளாஸிக்கில் கைதேர்ந்த அஜய் சக்ரவர்த்தியின் குரலில் இந்தப் பாடலைக் கேட்டாலே மனம் அமைதி அடையும். செனாய், டோலக் என வட இந்தியாவின் முதன்மை கருவிகளை பயன்படுத்தி இந்தப் பாடலை இளையராஜா உருவாக்கியிருக்கிறார்.
கர்நாடக இசைக்கலைஞரான சுதா ரகுநாதன் ‘இவண்’ படத்தில் “என்னை என்ன செய்தாய் வேங்குழலே..” என்கிற பாடலைப் பாட வைத்தார் இளையராஜா. அதே படத்தில் மற்றொருப் பாடலையும் சுதா ரகுநாதனை பாட வைத்துள்ளார். இளையராஜா இசையின் மூலமாக பின்னணிப் பாடகி ஆகும் வாய்ப்பை சுதா ரகுநாதன் பெற்றார்.
‘கோழி கூவுது’ திரைப்படத்தில் வரும் “ஏதோ மோகம், ஏதோ தாகம்..” பாடல் இன்றளவும் பிரபலமான பாடலாகும். இந்தப் பாடலை எஸ்.ஜானகியுடன் இணைந்து பாடியவர் டி.என்.கிருஷ்ணசந்திரன். கேரளத்தை பூர்வீகமாக கொண்ட இவர் நடிகர், பாடகர், பின்னணி குரல் கொடுப்பவர் என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இளையராஜாவின் இசையில் இன்னும் சில பாடல்களையும் பாடியிருக்கிறார்.
மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த ‘ராசா மகன்’ திரைப்படத்தில் வரும் “காத்திருந்தேன் தனியே..” என்கிற பாடலை சந்திரசேகர் மற்றும் ஸ்ரீலேகாவை வைத்து இளையராஜா பாட வைத்திருப்பார். சந்திரசேகர் குறித்து சரியான குறிப்புகள் கிடைக்கவில்லை. சிலர் சந்திரசேகர் மூத்த இசையமைப்பாளர் ஏ.எம். ராஜாவின் மகன் என்றும், சிலர் இளையராஜாவின் இசைக் குழுவில் இசைக்கருவி இசைப்பவர் என்றும் கூறுகின்றனர். இருப்பினும் அந்தக் குரலில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது.
‘கட்டப்பஞ்சாயத்து’ என்கிற படத்தில் ஒரு “சின்ன மணிக்குயிலே..” என்கிற பாடலை பாடியவர் ஜாலி ஆபிரகாம். மலையாளத்தில் பல பாடல்களைப் பாடிய இவர் தமிழில் ஒரு சில பாடல்களை மட்டுமே பாடியுள்ளார். இவரது குரல் ஜெயச்சந்திரனையும், அருண் மொழியையும் கலந்து கேட்பது போன்ற ஒரு உணர்வைத் தரும்.
1994-ம் ஆண்டு சந்தான பாரதியின் இயக்கத்தில் வெளியான ‘வியட்நாம் காலனி’ படத்தில் “கைவினை ஏந்தும் கலைவாணியே..” என்கிற பாடலை பாம்பே ஜெயஸ்ரீ பாடியிருப்பார். கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்ட அந்த பாடல் இளையராஜா இசையில் உருவான மற்றொரு அற்புதமான பாடலாகும்.
பிரபல இசையமைப்பாளர் உத்தம்சிங்கின் மகளான ப்ரீத்தி உத்தம்சிங்கிற்கு ‘ராசையா’ படத்தில் பாடும் வாய்ப்பினை இளையராஜா வழங்கினார். “காதல் வானிலே..” என்கிற பாடலை எஸ்.பி.பி உடன் இணைந்து பிரீத்தி உத்தம் சிங் பாடியிருந்தார். பாடலின் துவக்கத்தில் வரும் ஹம்மிங் துவங்கி இறுதிவரை ப்ரீத்தி தனது இனிமையான குரலால் பாடி அசத்தியிருப்பார்.