ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தக உறவுகள் காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளார். இந்த வரி விதிப்பு இந்தியப் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதியாளர்களை கடுமையாகப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கு முக்கிய காரணமாக இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை பெருமளவு கொள்முதல் செய்து வருகிறது.
இது ரஷ்யா- உக்ரைன் இடையே நடைபெறும் போரில் மறைமுகமாக ரஷ்யாவிற்கு ஆதரவாக இந்தியா இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருதுகிறார். ரஷ்யாவுடனான இந்த வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், இந்தியாவை அழுத்தம் கொடுக்கவும் 50% வரி விதிப்பை ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
24
50 % வரி விதிப்பால் அலறும் வியாபாரிகள்
இந்தியாவை வர்த்தக ஒப்பந்தங்களுக்கு இணங்க வைப்பதற்காகவும், ரஷ்யாவுடனான எண்ணெய் இறக்குமதியை குறைக்க வற்புறுத்தவும் ட்ரம்ப் இந்த வரி விதிப்பை ஒரு பொருளாதார அழுத்தமாக பயன்படுத்துகிறார். முதலில் இந்த வரி முதலில் 25% ஆக அறிவிக்கப்பட்டு, பின்னர் நேற்றைய திடம் மீண்டும் 25% உயர்த்தப்பட்டு மொத்தம் 50% ஆக விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சகம் "நியாயமற்றது" மற்றும் "பொருத்தமற்றது" என விமர்சித்துள்ளது,
34
திருப்பூரில் தொழில் பாதிப்பு
இந்த வரி விதிப்பு இந்தியாவின் ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பிற தொழில்களை பாதிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய பொருட்கள் விலை அமெரிக்காவில் உயர்வதன் காரணமாக வர்த்தகம் பெருமளவில் பாதிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூரில் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி நடைபெறும் நிலையில் 30 சதவீதம் அமெரிக்காவிற்கு மட்டுமே திருப்பூர் பின்னல் ஆடைகள் அனுப்பப்படுகிறது. இதனால் சுமார் 12,000 கோடி ரூபாய் அளவில் ஏற்றுமதி பாதிக்கும் என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்த வரி விதிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் மத்திய அரசு இது தொடர்பாக உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார். இந்த வரி உயர்வு இந்தியாவிற்கு என்பதை விட அமெரிக்க நுகர்வோர் தான் பாதிக்கப்படுவார்கள் எனவும் 100 ரூபாய்க்கு பெற்ற ஆடைகள் 150 ரூபாய்க்கு விற்கும் என்பதால் அவற்றை வாங்க முடியாமல் அமெரிக்கா நுகர்வோர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
இதனிடையே இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் உடனான வரியில்லா ஒப்பந்தம் காரணமாக இந்த வர்த்தகத்தை ஈடு செய்ய முடியும் என்றாலும் இழப்பை ஈடுகட்ட பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கான வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.