Id Idli Batter Business: மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, 6-ம் வகுப்பில் தோல்வியடைந்த ஒரு இளைஞர், இன்று ரூ.4,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் தலைவர். இட்லி, தோசை மாவு வியாபாரத்தைத் தொடங்கி, உலகளவில் வெற்றி கண்ட ஒரு தொழில்முனைவோரின் பயணம்.
"ஏழையாகப் பிறப்பது உன் தவறில்லை, ஆனால் ஏழையாக இறப்பது உன் தவறு" என்றொரு மேற்கோள் உண்டு. இந்த வரிக்குச் சரியான உதாரணம் பி.சி. முஸ்தபா. கேரளாவின் ஒரு ஏழை கூலித் தொழிலாளியின் மகனாகப் பிறந்த இவர், இன்று 'iD ஃபிரெஷ் ஃபுட்' என்ற மாபெரும் நிறுவனத்தின் நிறுவனர். இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் இவரது வெற்றிப் பயணத்தைப் பற்றிப் பார்ப்போம்.
25
யார் இந்த பி.சி. முஸ்தபா?
பரீட்சையில் ஃபெயிலானால் வாழ்க்கை முடிந்துவிட்டது என நினைக்கும் இளைஞர்களுக்கு முஸ்தபாவின் வாழ்க்கை ஒரு பாடம். கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார் முஸ்தபா. இவரது தந்தை ஒரு தினக்கூலி. படிப்பில் ஆர்வம் இல்லாததால், 6-ம் வகுப்பில் ஃபெயிலாகி, தந்தையுடன் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தார். ஆனால், ஒரு ஆசிரியர், 'படிப்பு மட்டுமே உன் வறுமையை மாற்றும்' என்று ஊக்கமளித்து மீண்டும் பள்ளியில் சேர்த்தார். அதன்பிறகு, கடினமாகப் படித்து, கோழிக்கோடு NIT-யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டமும், பெங்களூரு IIM-ல் MBA பட்டமும் பெற்றார்.
35
ஐடி வேலையை விட்டுவிட்டு வியாபாரத்தில் நுழைந்தார்
படிப்பு முடிந்ததும், அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பெரிய ஐடி நிறுவனங்களில் கைநிறைய சம்பளத்தில் வேலை பார்த்தார். ஆனால், சொந்தமாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பினார். 2005-ல், பெங்களூரில் 50 சதுர அடி கொண்ட ஒரு சிறிய அறையில், தனது ஐந்து உறவினர்களுடன் சேர்ந்து 'iD ஃபிரெஷ் ஃபுட்' நிறுவனத்தைத் தொடங்கினார். ஆரம்ப நாட்களில், முஸ்தபாவே தனது ஸ்கூட்டரில் இட்லி-தோசை மாவு பாக்கெட்டுகளை கடைகளுக்கு டெலிவரி செய்தார்.
சந்தையில் பல பிராண்டுகள் இருந்தாலும், 'iD ஃபிரெஷ் ஃபுட்' வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் தரம் தான். வீட்டில் செய்வது போலவே, எந்தப் பதப்படுத்தும் ரசாயனங்களும் (preservatives) இல்லாமல் மாவை வழங்க வேண்டும் என்பதில் முஸ்தபா உறுதியாக இருந்தார். இதுவே மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியது. இட்லி, தோசை மாவு விற்பனை சூடுபிடித்ததும், பரோட்டா, தயிர், காபி டிக்காஷன் போன்ற பிற தயாரிப்புகளையும் சந்தையில் அறிமுகப்படுத்தினர்.
55
இட்லி, தோசை மாவு மூலம் ரூ.4,000 கோடி சாம்ராஜ்யம்
ஒரு சிறிய அறையில் ஸ்கூட்டரில் தொடங்கிய வியாபாரம், இன்று உலகளவில் விரிவடைந்துள்ளது. தற்போது 'iD ஃபிரெஷ் ஃபுட்' நிறுவனத்தின் மதிப்பு ரூ.4,000 கோடிக்கும் மேல். இந்தியா மட்டுமின்றி துபாய், அமெரிக்கா, ஓமன் உட்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் கிடைக்கின்றன. தினமும் சுமார் 50,000 கிலோ ஃப்ரெஷ் மாவை இவர்கள் தயாரிக்கிறார்கள். தோல்விகள் நம் எதிர்காலத்தை தீர்மானிக்காது என்பதற்கு முஸ்தபாவின் கதை ஒரு சிறந்த உதாரணம். கடின உழைப்பும், பெரிய கனவுகளும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.