Thaaimaaman Thanga Mothira Thittam: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு தகுதியானவர்கள் யார்? தேவைப்படும் ஆவணங்கள் என்ன? யாருக்கு இது கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? என்கிற வழிகாட்டு முறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதில் ஒன்றுதான் ‘தாய் மாமன் தங்க மோதிர திட்டம்'. இந்த திட்டத்தின் கீழ் பிறந்த குழந்தைகளுக்கு அரசு சார்பில் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்கிற அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்று பலரும் காத்திருந்த நிலையில், அது குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் யார்? இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும்? தேவையான ஆவணங்கள் என்ன? என்பது குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழர் பாரம்பரியத்தில் ‘தாய்மாமன் சீர்’ என்கிற மரபின்படி தமிழ்நாடு முதலமைச்சர் தாயின் சகோதரர் என்ற முறையில், புதிதாகப் பிறந்த குழந்தையை வரவேற்று, வாழ்த்தும் விதமாக தங்கம் உள்ளிட்ட பரிசுகளை வழங்க இருக்கிறார். தமிழர் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையிலும், அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் பங்கை ஏற்று அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக இந்த தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன்பெற உள்ளனர். இந்த திட்டம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று தமிழக முதலமைச்சரால் துவக்கி வைக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் 7.8 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. மொத்த பிறப்புகளில் 99.9% மருத்துவமனையில் நடைபெறும் பிரசவங்களாக உள்ளன. இதில் அரசு சுகாதார நிலையங்களில் ஏறக்குறைய 53% அதாவது சுமார் 4.2 லட்சம் பிரசவங்கள் நடக்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் ஒரு பிரசவத்திற்கு ஆகும் சராசரி செலவு ரூ.63,473/- ஆக உள்ள நிலையில் அரசு மருத்துவமனையில் அது வெறும் ரூ.1,364/- மட்டுமே என தேசிய மாதிரி ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் யாருக்கெல்லாம் பயன் கிடைக்கும் என்ற வழிகாட்டுதலும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தத் திட்டத்திற்கு தகுதியானவர்கள் மற்றும் அடிப்படை ஆவணங்கள் குறித்தான விபரங்கள் பின்வருமாறு. தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்களாவர். அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும். தாய் RCH ID-யுடன் PICME-யில் பதிவு செய்திருக்க வேண்டும். புதிதாக பிறக்கும் பச்சிளம் குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் தகுதியானவர்கள்.
56
தாய்மாமன் தங்க மோதிர திட்டம் - தேவையான ஆவணங்கள்
இந்தத் திட்டத்தை பெறுவதற்கு பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும். குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, தொழிலாளர் நல வாரியங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, அஞ்சல் துறையால் வழங்கப்பட்ட முகவரிச் சான்று அல்லது பிறப்பிடச் சான்று ஆகியவை அடங்கும். ஒரு கிராம் தங்க மோதிரம் கொள்முதல் செய்யும் பணி தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மூலம் மேற்கொள்ளப்படும் என்றும், இந்தத் திட்டத்தை செயல்படுத்தவும், கண்காணிக்கவும், நிர்வகிக்கவும் பிரத்யேக நிர்வாக அமைப்பான ‘மாநிலத் திட்ட மேலாண்மை பிரிவு’ அமைக்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
66
தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் முக்கியத்துவம்
தமிழ்நாடு அரசின் சுகாதார சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பை நினைவு கூறும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் ‘தாய்மாமன் தங்க மோதிர திட்டம்’ செயல்படுத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், இத்திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் உடனடியாக கோர்வதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.