RBI: ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு இருந்தால் ரூ.10,000 அபராதம்? ஆர்பிஐ ரூல்ஸ் சொல்வது என்ன?

Published : May 21, 2026, 07:47 PM IST

RBI: ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு இருந்தால் ஆர்பிஐ ரூ.10,000 அபராதம் விதிப்பதாக தகவல் பரவி வருகிறது. இது உண்மையா? ஆர்பிஐ ரூல்ஸ் என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம். 

PREV
14
அதிக வங்கி கணக்கு இருந்தால் ரூ.10,000 அபராதம்?

இந்தியாவில் வங்கி சேவைகள் பெரும் அத்தியாவசிய தேவையாக உள்ளது. நாடு முழுவதும் நிறைந்துள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மக்களுக்கு சேவையை வழங்கி வருகின்றன. என்னதான் டிஜிட்டல் யுகமாக இருந்தாலும் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய, அரசு திட்டங்களின் பலன்களை பெற, ஓய்வூதியம் பெற என அனைத்து வகைகளுக்கும் வங்கிகளின் தேவை அதிகாகி வருகிறது. இந்த நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரூ.10,000 அபராதம் விதிக்க உள்ளது என்ற ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வந்தது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

24
இணையத்தில் பரவிய தகவல்

அதாவது தனிநபர்கள் தங்களின் பெயரில் பல வங்கிக் கணக்குகளை வைத்திருப்பதைத் தடுக்க அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகள் வைத்திருப்பவர்கள் உடனடியாக அவற்றை மூட வேண்டும், தவறினால் ₹10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது. ஆர்பிஐ தரப்பில் இதுகுறித்து ஆராய்ந்தபோது, இப்படி ஒரு உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பிக்கவே இல்லை என்பது தெளிவாகியுள்ளது. ஆகவே இது முற்றிலும் வதந்தி மற்றும் போலிச் செய்தியாகும்.

ஆர்பிஐ ரூல்ஸ் என்ன?

இந்திய சட்டப்படி மற்றும் ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, ஒரு தனிநபர் தனது தேவைக்கேற்ப எத்தனை வங்கிகளில் வேண்டுமானாலும், எத்தனை சேமிப்புக் கணக்குகளை (Savings Accounts) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ள முழு உரிமை உண்டு. கணக்குகளின் எண்ணிக்கைக்கு எந்தவித உச்சவரம்பும் கிடையாது, அபராதமும் கிடையாது.

34
குழப்பம் எங்கிருந்து வந்தது?

பிறகு ரூ.10,000 அபராதம் என்ற குழப்பம் எங்கிருந்து வந்தது? என்று நீங்கள் கேட்கலாம். அண்மை காலமாக அதிகரித்து வரும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மோசடிகளைத் தடுப்பதற்காக, ரிசர்வ் வங்கி ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை ஆலோசித்து வருகிறது. அதன்படி ஒரு பயனர், தனக்கு அறிமுகமில்லாத ஒரு புதிய நபரின் கணக்கிற்கு முதன்முறையாக ₹10,000-க்கும் அதிகமாக டிஜிட்டல் முறையில் (UPI, IMPS, NEFT) பணம் அனுப்பும்போது, அந்தப் பரிவர்த்தனை உடனடியாகப் போய்ச் சேராமல் 1 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும்

இந்த இடைவெளியில், தவறுதலாகப் பணம் அனுப்பப்பட்டிருந்தால் அதை வாடிக்கையாளர் ரத்து செய்ய முடியும். இந்த ஆன்லைன் மோசடி தடுப்பு நடவடிக்கைக்கான "ரூ.10,000" என்ற வரம்பை தவறாகப் புரிந்துகொண்ட சிலர், 'பல கணக்குகள் வைத்திருந்தால் ரூ.10,000 அபராதம்' என வதந்தியாகத் திரித்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர். இது மக்களிடையே குழப்பம் ஏற்படுவதற்கு காரணமாகி விட்டது.

44
வங்கிகள் இந்த கட்டணம் விதிக்கலாம்

அதே வேளையில் ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்காது என்றாலும், நிதி மேலாண்மை அடிப்படையில் அதிக வங்கி கணக்குகளை வைத்திருப்பது சில மறைமுக இழப்புகளை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது ஒவ்வொரு வங்கியிலும் ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை என குறிப்பிட்ட மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும். இதை பராமரிக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட வங்கி உங்களிடம் இருந்து மறைமுகக் கட்டணங்களை வசூலிக்கும்.

மேலும் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு வங்கி கணக்கின் ஏடிஎம் கார்டு (Debit Card), எஸ்.எம்.எஸ் அலர்ட் (SMS Alerts) போன்ற சேவைகளுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை உங்கள் கணக்கில் இருந்து கழிக்கப்படும். இந்த தொகை வங்கிகளுக்கு ஏற்ப மாறுபடும். இது தவிர ஒரு வங்கிக் கணக்கில் தொடர்ந்து 2 ஆண்டுகள் எந்தவொரு பரிவர்த்தனையும் செய்யவில்லை எனில், அது 'செயலற்ற கணக்காக' மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories