பிரதமரின் கிசான் மாந்தன் யோஜனா 18 முதல் 40 வயதுடைய விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் செயல்படுகிறது. இந்தத் திட்டத்தில் சேரும் விவசாயிகள் வயது 60 வயதை எட்டும்போது, ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் ஓய்வூதியமாகக் கிடைக்கும். இந்தத் தொகை அவரது வங்கிக் கணக்கிலேயே நேரடியாகச் செலுத்தப்படும்.
மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசும் நாட்டின் ஏழை மக்களுக்கு நிதிப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் விவசாயிகளுக்காக சிறப்பாக மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பிரதமரின் கிசான் மந்தன் திட்டம் பற்றித் தெரிந்துகொள்ளலாம். இத்திட்டம் நாட்டின் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் ஆகும்.
PM kisan
பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா திட்டத்தில் 18 முதல் 40 வயதுடைய விவசாயிகள் சேரலாம். அவர்களுக்கு 60 வயது ஆகும்போது, மாதம்தோறும் வங்கிக் கணக்கில் 3000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். இத்தொகை முதலீடு செய்யும் பணத்தைப் பொறுத்து மாறுபடும்.
மேலும், இத்திட்டத்தில் விவசாயி ஒருவர் இறந்துவிட்டால், ஓய்வூதியத்தில் 50 சதவீதம் அவரது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். இறந்தவரின் கணவன் அல்லது மனைவிக்கு மட்டுமே இந்தக் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் ரூ.55 முதல் ரூ.200 வரை டெபாசிட் செய்ய வேண்டும். விவசாயி எந்த தொகையை டெபாசிட் செய்கிறார்களோ, அதே தொகையை அவரது பெயரில் மத்திய அரசும் டெபாசிட் செய்யும். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.3000 ஓய்வூதியம் பெற முடியும்.
ஒரு விவசாயி 18 வயதில் இத்திட்டத்தில் சேர்ந்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.55 டெபாசிட் செய்ய வேண்டும். 40 வயதில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.200 டெபாசிட் செய்ய வேண்டும். இத்திட்டத்தின் பலன்களைப் பெற, விவசாயிக்கு ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு அல்லது பிரதமரின் கிசான் திட்டக் கணக்கு இருக்க வேண்டும்.