இந்தியாவில் நாளுக்கு நாள் பைக் மற்றும் கார்களின் விற்பனை உயர்ந்து கொண்டே போகிறது. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதி மற்றும் உற்பத்தி செய்வதில் இந்தியா முக்கிய அங்கம் வகித்து வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்பட பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி காலத்தில் 140 டாலர் வரை உயர்ந்த கச்சா எண்ணெய் விலை ஆட்சியை நிறைவடையும் போது 113 டாலராக இருந்தது. 2014ம் ஆண்டு பிரதமராக மோடி பதியேற்றுக்கொண்ட பிறகு கடுமையாக சரியத் தொடங்கிய கச்சா எண்ணெய் விலை 2017ம் ஆண்டில் மீண்டும் அதிகரிக்கக் தொடங்கியது. இதையடுத்து மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.
இம்முறை மாற்றியமைக்கப்பட்டு தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. இந்த விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இது சர்வதேச சந்தையின் நிலவரத்திற்கு ஏற்க பெட்ரோல், டீசல் விலை அமைய வழிவகுக்கும் என கூறப்பட்டது. ஆனால் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை அதிகரித்தை தவிர விலை குறையவில்லை.
இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு ஜூன் முதல் கடுமையான கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரியத் தொடங்கியது. 2022 ஜூன் மாதம் 116 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை படிப்படியாக குறைந்து 2023 ஜூன் மாதம் 70 டாலராக சரிந்தது. அதன் பிறகு சற்றே உயர்ந்த நிலையில் மீண்டும் தற்போது 74 டாலராக கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. கடந்த 17ம் தேதியில் இருந்து, கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 74 டாலருக்கும் குறைவாக நீடிக்கிறது. கச்சா எண்ணெய் விலை 75 டாலரில் சில வாரங்கள் நீடித்தால் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கக்கூடும் என பெட்ரோலியத் துறை செயலர் கடந்த சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார்.
இந்நிலையில் கச்சா எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆகையால் பெட்ரோல், டீசல் விலை 2 முதல் 3 ரூபாய் வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இக்ரா வெளியிட்ட அறிக்கையில்: கடைசியாக மார்ச் மாதம் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்ட போது சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 83 முதல் 84 டாலராக இருந்தது. தற்போது செப்டம்பரில் கச்சா எண்ணெய் இறக்குமதி விலை சராசரியாக பேரலுக்கு 74 டாலராக குறைந்துள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களின் லாபம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதையடுத்து, கச்சா எண்ணெய் விலை மாற்றமின்றி நிலையாக இருக்கும்பட்சத்தில் பெட்ரோல், டீசலின் சில்லறை விற்பனை விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மற்றும் தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கான அறிவிப்பு
அக்டோபர் மாதத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அதன் பலனை எண்ணெய் நிறுவனங்களே அனுபவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.