அமெரிக்காவின் 50% வரியைச் சமாளிக்க, கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்டதைப் போல சிறப்பு சலுகைத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு, அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியை சமாளிக்க, கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்டதைப் போல, ஒரு சிறப்பு சலுகைத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா அரசு 50 சதவீதம் வரி விதித்துள்ளது. இதனால், ஏற்றுமதியை பெரிதும் நம்பியுள்ள இந்திய தொழில் துறைக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக ஜவுளித்துறை சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நிர்மலா சீதாராமன் சென்னையில் நேற்று கலந்துரையாடினார்.
24
ஜவுளி சங்க பிரதிநிதிகள் கோரிக்கை
இந்தக் கூட்டத்தில் பேசிய ஜவுளித்துறை சங்க பிரதிநிதிகள், ஜவுளித் துறையானது 30 சதவீதத்திற்கும் மேல் அமெரிக்க ஏற்றுமதியை நம்பியுள்ளது. அமெரிக்காவின் 50 சதவீத வரியால் மிகப்பெரிய நெருக்கடியை ஜவுளித் துறை எதிர்கொண்டுள்ளது. இது தற்காலிக நெருக்கடியாக இருக்கலாம் என்றாலும், ஏற்றுமதிக்கான மாற்று வழிகளை மத்திய அரசு திட்டமிட வேண்டும்.
மேலும், தொழில் துறையைப் பாதுகாக்க ஜி.எஸ்.டி. வரி குறைப்பு, அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், கடன் மற்றும் வட்டி சலுகைகள், கடன் தவணைகள் செலுத்த அவகாசம் அளித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
34
சிறப்பு சலுகை தொகுப்பு
சங்கங்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்த போதே எப்படி சமாளிப்பது என தத்தளித்தோம். இந்த நேரத்தில் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருப்பது பெரும் சுமையாகியுள்ளது.
"இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கான பணி ஏற்கனவே நடந்து வருகிறது. அமெரிக்க வரி விதிப்பு நெருக்கடியிலிருந்து தொழில் துறை மீள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா கால நெருக்கடியின் போது அறிவிக்கப்பட்டதை போல, சிறப்பு சலுகை தொகுப்பு திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்" என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மேலும், "50 சதவீத வரி நெருக்கடியில் இருக்கும்போது, கடன் தவணைகள், வட்டி செலுத்துதல் போன்றவை தாமதமானால் வங்கிகள் நடவடிக்கை எடுக்குமா என்ற அச்சம் உள்ளது. அதற்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் அரசின் பரிசீலனையில் உள்ளன. கூடிய விரைவில் இதற்கான அறிவிப்பு வரும்." எனவும் அமைச்சர் கூறினார்.
ஏற்றுமதி பொருட்களை வேறு எங்காவது மாற்றி அனுப்ப வேண்டுமா அல்லது வேறு என்ன செய்வது என்ற பிரச்சனைக்கு தீர்வு காண, அரசின் செயல்முறைகளில் மாற்றங்களை செய்யவும் மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.