இந்த ஒப்பந்தம் அமலுக்கு வருவதால், பிரிட்டிஷ் ஸ்காட்ச் விஸ்கி மற்றும் ஜின் மீதான இறக்குமதி வரி 150 சதவீதத்திலிருந்து ஒரேயடியாக 75 சதவீதமாகக் குறையும். அடுத்த 10 ஆண்டுகளில் இது 40 சதவீதமாகக் குறைய வாய்ப்புள்ளது. கார் பிரியர்களுக்கும் ஒரு நல்ல செய்தி இருக்கிறது. தற்போது 110 சதவீதம் வரை இறக்குமதி வரி உள்ள பிரிட்டிஷ் கார்களின் வரி, அடுத்த 10 ஆண்டுகளில் 10 சதவீதமாகக் குறையும். ஆனால், இந்தியாவின் எலக்ட்ரிக் வாகனச் சந்தையைப் பாதுகாக்க, பிரிட்டிஷ் எலக்ட்ரிக்-ஹைப்ரிட் வாகனங்களின் இறக்குமதிக்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சாக்லேட்கள், பிஸ்கட்கள், குளிர்பானங்கள் போன்றவற்றுக்கும் விலை குறையும்.
இந்தியப் பொருட்களுக்கு பிரிட்டனில் ஜாக்பாட்
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்பவர்களுக்கு பிரிட்டிஷ் சந்தையில் ஒரு பெரிய முன்னேற்றத்தை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தும். 99 சதவீத இந்தியப் பொருட்களுக்கு வரி இல்லாமல் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யலாம். ஜவுளி, கடல்சார் பொருட்கள், தோல், காலணிகள், விளையாட்டு உபகரணங்கள், பொம்மைகள், நகைகள் ஆகிய துறைகளுக்கு இதன் மிகப்பெரிய பலன் கிடைக்கும். இதுதவிர, இன்ஜினீயரிங் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், ஆர்கானிக் கெமிக்கல்கள் ஆகியவற்றுக்கும் பெரிய சந்தை கிடைக்கும்.